சென்னை,
நடிகர் கமல்ஹாசனுடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. எனக்கு அவர் சம்பள பாக்கி வைத்து இருக்கிறார் என்று கடந்த சில தினங்களுக்கு முன் நடிகை கவுதமி கூறினார்.
இதுபற்றி அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்த செய்தியில், கமலுடன் இணைந்து செயல்பட்டபோது அவருடைய ராஜ்கமல் பட நிறுவனத்துக்காக ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றினேன். வேறு பட அதிபர்கள் தயாரிப்பில் கமல்ஹாசன் நடித்த படங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக இருந்தேன். அதன்மூலம் எனக்கு வருமானம் வந்தது.
கமல்ஹாசன் நடித்துள்ள தசாவதாரம், விஸ்வரூபம் படங்களிலும் பணியாற்றினேன். ஆனால் அந்த படங்களுக்கு எனக்கு தர வேண்டிய சம்பள பாக்கியை இன்னும் தரவில்லை. அந்த பணம் எனது வாழ்க்கைக்கு முக்கியமானதாக இருக்கிறது. சம்பள பாக்கியை வசூலிக்க பல முறை முயன்றும் கிடைக்கவில்லை என தெரிவித்து உள்ளார்.
சம்பள பாக்கி வைத்து இருப்பதாக கவுதமி கூறியுள்ள புகாரை கமல்ஹாசன் பட நிறுவனம் மறுத்து உள்ளது. விஸ்வரூபம் படத்தில் பணியாற்றியதற்காக கவுதமிக்கு கொடுக்க வேண்டிய முழு சம்பளமும் கொடுக்கப்பட்டுவிட்டது என்றும், தசாவதாரம் நாங்கள் தயாரித்த படம் அல்ல என்றும் அவரது தரப்பில் கூறப்பட்டது.
கமல் சம்பள பாக்கி வைத்திருக்கிறார் என கவுதமி புகார் கூறியதற்கு எதிர்ப்பும் கிளம்பியது. இந்த நிலையில், நடிகை கவுதமி, ஆதாரமின்றி எந்த காரணமும் இல்லாமல் நான் எதுவும் பேச மாட்டேன்.
யாரிடமும் நான் எதுவும் எதிர்பார்க்கவில்லை. சம்பள பாக்கியை சம்பந்தப்பட்ட நிறுவனம் தந்தாலே போதும் என கூறியுள்ளார்.