சென்னை,
பிரபல நடிகர் ரவி மோகன் (ஜெயம் ரவி) மற்றும் அவரது மனைவி ஆர்த்தி ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் பிரியப்போவதாக அறிவித்திருந்தனர். தொடர்ந்து, தங்களது திருமண பதிவை ரத்து செய்து விவாகரத்து வழங்கக்கோரி ரவி மோகன் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த விவாகரத்து வழக்கு தற்போது சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
இதற்கிடையில் சில மணி நேரத்திற்கு முன்பு நடிகர் ரவி மோகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "என்னுடைய பிள்ளைகளை பார்க்க அனுமதிக்க மறுக்கிறார்கள். என்னை மேலும் சீண்டிப் பார்க்காதீர்கள், இனி நான் சாது கிடையாது. எனக்கு நேர்ந்த அவமானங்களைத் தாங்க முடியாமல் இப்போது என்னை நானே வருத்திக்கொள்ளத் தொடங்கிவிட்டேன். விவாகரத்து கிடைக்கும் வரை இனி புதிய படங்களிலும் நடிக்கப் போவதில்லை, நடித்த படங்களையும் வெளியிடப் போவதில்லை. நான் உயிரோடு இருக்கக் கூடாது என்பதுதான் அவர்களின் எண்ணம்" என்று உருக்கமாகக் குறிப்பிட்டார். மேலும் மூன்றெழுத்து இட்லி நடிகை தனது வாழ்க்கையை கெடுத்ததாக குற்றச்சாட்டி இருந்தார்.
ரவி மோகனின் இந்த ஆவேசப் பேச்சைத் தொடர்ந்து, ஆர்த்தி ரவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு காட்டமான பதிவை வெளியிட்டார். அதில், "தூங்கிக் கொண்டிருக்கும் சிங்கத்தை எழுப்பாதீர்கள். என்னுடைய அமைதியை ஒருபோதும் பலவீனமாக நினைக்காதீர்கள். அதைப் பயன்படுத்தி யாரும் அநியாயமாக நடந்து கொள்ள முயற்சிக்க வேண்டாம்.
என் குழந்தைகளையும் என் கண்ணியத்தையும் காப்பாற்ற வேண்டிய சூழல் வந்தால், உலகையே எதிர்கொள்வேன். இறுதியில் வெல்வது எப்போதும் உண்மையே" என்று பதிவிட்டிருந்தார். இந்த பதிவிற்கு நடிகை குஷ்பு சுந்தர் கமெண்ட் மூலம் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.