சினிமா செய்திகள்

"பல இரவுகள் தூங்கவில்லை"- கணவரின் கண்ணீரை கண்டு மேடையில் அழுத ஜெனிலியா - வீடியோ வைரல்

நடிகை ஜெனிலியா உணர்ச்சிவசப்பட்டு மேடையிலேயே கண்ணீர் விட்டது அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியடையச் செய்தது.

மும்பை,

மராட்டியப் பேரரசர் சத்ரபதி சிவாஜி மகாராஜின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள 'ராஜா சிவாஜி' (Raja Shivaji) திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று மும்பையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் நடிகை ஜெனிலியா உணர்ச்சிவசப்பட்டு மேடையிலேயே கண்ணீர் விட்டு அழுதது அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியடையச் செய்தது.

இப்படத்தை இயக்கி நாயகனாக நடித்துள்ள ரித்தேஷ் தேஷ்முக், மேடையில் பேசும்போது இந்தப் படத்தின் நீண்ட காலப் பயணம் மற்றும் அதை உருவாக்குவதில் சந்தித்த சவால்கள் குறித்து உருக்கமாகப் பேசினார். அப்போது தனது மனைவி ஜெனிலியாவைப் பார்த்து, "நீதான் எனது மிகப்பெரிய பலம்" என்று ரித்தேஷ் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

கணவரின் வார்த்தைகளைக் கேட்டதும், அருகில் நின்று கொண்டிருந்த ஜெனிலியா உணர்ச்சி தாளாமல் மேடையிலேயே கண்கலங்கி அழத் தொடங்கினார். ரித்தேஷ் அவரைத் தேற்றி அணைத்துக் கொண்ட புகைப்படம் மற்றும் வீடியோகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

'ராஜா சிவாஜி' படத்தில் ரித்தேஷ் தேஷ்முக் (சிவாஜி மகாராஜ்), ஜெனிலியா (சாய் பாய்), அபிஷேக் பச்சன் (சம்பாஜி), சஞ்சய் தத் (அப்சல் கான்), வித்யா பாலன் (படி பேகம்) மற்றும் பாலிவுட் நட்சத்திரங்கள் பர்தீன் கான், பாக்யஸ்ரீ ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும், சல்மான் கான், சிவாஜியின் நம்பிக்கைக்குரிய வீரரான 'ஜீவா மஹாலா' கதாபாத்திரத்தில் ஒரு முக்கியமான கவுரவத் தோற்றத்தில் தோன்றுகிறார்.

ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் மும்பை பிலிம் கம்பெனி இணைந்து தயாரித்துள்ள இப்படம், அஜய் - அதுல் இசையில் பிரமாண்டமான ஆக்‌சன் காட்சிகளுடன் உருவாகியுள்ளது. மே 1 -ம் தேதி தமிழ் , மராத்தி, இந்தி மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் இப்படம் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.