திருவனந்தபுரம்,
சின்னத்திரை மூலம் ரசிகர்களிடையே பிரபலமான ரேகா ரதீஷ், தன்னை நீண்ட நாட்களாக மன உளைச்சலுக்கு உள்ளாக்கி வரும் சில யூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோவில், “கடந்த 8-9 மாதங்களாக வேலை இல்லாமல் இருந்து வருகிறேன். எனக்கு ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மகன் உள்ளான். கடந்த சில மாதங்களாக சில யூடியூபர்கள் என்னை பற்றி தொடர்ந்து அவதூறு பரப்பி வருகின்றனர். இதனால் கடும் மன அழுத்தம் ஏற்பட்டுள்ளது.
கேரளாவில் இத்தகைய பிரச்சினைகளால் பல உயிர்கள் பறிபோகின்றன. மகனுக்காக வாழும் எனக்கு இந்த மன உளைச்சலை தாங்க முடியவில்லை. எனக்கு ஏதாவது நடந்தால் அதற்கு காரணம் அந்த யூடியூபர்கள்தான் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்,” என அவர் கண்ணீருடன் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
மேலும், “என்னை மட்டுமல்ல, என் துறையில் உள்ள பலரையும் இவர்கள் இதேபோல் செய்து வருகின்றனர். தயவு செய்து இதற்கு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்,” எனவும் முதல்-மந்திரியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். ரேகாவின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரேவதி நடித்த ‘உன்னை நான் சந்தித்தேன்’ திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ரேகா ரதீஷ். சினிமா பின்னணி கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த அவர், டப்பிங் கலைஞர் ரதீஷ் மற்றும் நடிகை ராதா தேவி ஆகியோரின் மகள்.
பெற்றோர் விவாகரத்திற்குப் பிறகு தந்தையுடன் சென்னையில் வளர்ந்த ரேகாவுக்கு சினிமா வாய்ப்புகள் குறைவாக இருந்தாலும், சீரியல் வாய்ப்புகள் தொடர்ந்து கிடைத்தன. 14 வயதில் ‘நிரகூத்து’ என்ற மலையாளப் படத்தில் நடித்த அவர், பின்னர் முழுநேர சீரியல் நடிகையாக மாறினார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘நீலக்குயில்’ உள்ளிட்ட பல தொடர்களில் நடித்துள்ளார்.