ஏழை விவசாயியின் சட்ட போராட்டத்தை மையமாக வைத்து ரூபாய் 2000 என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது. பாடல்கள் இல்லாத படமாக எடுத்துள்ளனர். கோர்ட்டு வழக்கு விவாத காட்சிகள் அதிகம் உள்ளன. இந்த படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்பினர். படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் சர்ச்சை காட்சிகள் இருப்பதாக சொல்லி படத்தை வெளியிட அனுமதி மறுத்தனர். மத்திய அரசை விமர்சிக்கும் காட்சிகள் இருப்பதாகவும் எதிர்ப்பு கிளம்பியது. சர்ச்சைக்குரிய 105 காட்சிகளை நீக்கினால் அனுமதி அளிப்பதாக தெரிவித்தனர். இதனை படக்குழுவினர் ஏற்கவில்லை. தணிக்கை குழுவினர் முடிவை எதிர்த்து மேல் முறையீட்டு குழுவுக்கு சென்றனர். அங்கு மீண்டும் படம் தணிக்கை செய்யப்பட்டு 24 சர்ச்சை காட்சிகளை நீக்கி விட்டு படத்தை வெளியிட அனுமதி அளித்துள்ளனர். இந்த படத்தை ருத்ரன் இயக்கி உள்ளார். இதில் பாரதி கிருஷ்ணகுமார், ருத்ரன் பராசு, ஷர்னிக, அய்யநாதன். தியாகு, கராத்தே வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.