தமிழ் சினிமாவின் உச்ச நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், கடந்த 2023-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம், 'ஜெயிலர். இந்த படத்தை நெல்சன் இயக்கியிருந்தார். இதில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், மலையாள நடிகர் மோகன்லால் உள்பட பல முக்கிய நடிகர்களும் நடித்திருந்தனர். இந்த படத்தில் ரஜினிகாந்த், நகைச்சுவை நடிகர் யோகி பாபு கூட்டணியில் காமெடி காட்சிகள் ரசிக்கும்படியாக அமைந்திருந்தன.
தற்போது ஜெயிலர் படத்தின் 2-ம் பாகம் உருவாகி வருகிறது. இந்த படத்திலும் பிற மொழி சினிமாவைச் சேர்ந்த சில முன்னணி நடிகர்கள் நடிக்க இருக்கிறார்கள். அதோடு ரஜினிகாந்த் - யோகி பாபு கூட்டணியும் களைகட்ட இருக்கிறதாம். இதற்காக யோகி பாபுவுக்கு கூடுதல் காட்சிகள் வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதுபற்றி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் யோகிபாபு கூறுகையில், "முதல் பாகத்தை விட 'ஜெயிலர் 2' படத்தில் என்னுடைய கதாபாத்திரத்தை வித்தியாசமாகவும், மெருகேற்றியும் வடிவமைத்துள்ளார், இயக்குனர் நெல்சன். ரஜினிகாந்தைப் போல சுறுசுறுப்பாக இருக்கும் நடிகரை நான் பார்த்ததில்லை. படப்பிடிப்பின்போது என்னிடம் வந்து, 'யோகி என்னைப் பாருங்கள். எல்லாம் சரியாக இருக்கிறதா? ஜெயிலர் படத்தில் இருந்தது போலவே என்னுடைய கெட்டப் சரியாக அமைந்திருக்கிறதா?' என்று கேட்பார்.
இப்போதும் கூட முதல் படத்தில் நடிக்கும் ஒரு நடிகரைப் போல, அவ்வளவு ஈடுபாட்டுடன் வேலை செய்கிறார். அவரைப் பார்க்கும் போது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது" என்று கூறியுள்ளார்.