சினிமா செய்திகள்

'ஜனநாயகன்' பட லீக் விவகாரம்: கைதான 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

கடந்த ஏப்ரல் 3-ம் தேதி 'ஜனநாயகன்' படம் இணையதளத்தில் கசிந்தது.

சென்னை,

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தை இணையதளத்தில் சட்டவிரோதமாக வெளியிட்ட புகாரில் கைது செய்யப்பட்ட 9 பேரின் ஜாமீன் மனுக்களை சென்னை முதன்மை அமர்வு கோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவிருந்த இத்திரைப்படம், தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் தள்ளிப்போனநிலையில், கடந்த ஏப்ரல் 3-ம் தேதி இணையதளத்தில் கசிந்தது. இது திரையுலகினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இச்சம்பவம் தொடர்பாகப் பட தயாரிப்பு நிறுவனமான கே.வி.என்.புரொடக்‌சன்ஸ் அளித்த புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீஸார் 21 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இதில் 9 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் தங்களுக்கு ஜாமீன் கோரி கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்னிலையில் இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், "இந்த படத்தை இணையதளத்தில் வெளியிட்டதில் எங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை. நாங்கள் கூகுள் டிரைவ் லிங்க் மூலம் மட்டுமே படத்தைப் பார்த்தோம். இதற்கும் எங்களுக்கும் நேரடித் தொடர்பு இல்லை," என வாதிட்டு ஜாமீன் கோரினர்.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஜி.தேவராஜன், பல கோடி ரூபாய் முதலீட்டில் உருவான படத்தை சட்டவிரோதமாக வெளியிட்டு பெரும் லாபம் ஈட்டியுள்ளதாகவும், இந்த சதித்திட்டத்தின் பின்னணியில் உள்ள மற்ற நபர்களைக் கண்டறிய வேண்டியிருப்பதால் ஜாமீன் வழங்கக் கூடாது என்றும் வாதிட்டார். தயாரிப்பு நிறுவனம் சார்பிலும் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறி ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கைதான 9 பேரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.