சென்னை,
தமிழக முதல்-அமைச்சர் விஜய்யை, நடிகர் கமல்ஹாசன் நேற்று அவரது நீலாங்கரை இல்லத்தில் நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, தமிழ் திரைப்படத் துறையின் வளர்ச்சி மற்றும் எதிர்கால நலன் கருதி சில மிக முக்கியமான கோரிக்கைகளை அவர் முதல்-அமைச்சரிடம் முன்வைத்துள்ளார்.
திரையுலகைச் சார்ந்த தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை உள்ளடக்கிய அந்த 6 முக்கிய கோரிக்கைகள் இதோ:
1. அரசு சார்பில் ஓடிடி தளம்:
சிறிய பட்ஜெட் படங்கள் மற்றும் தரமான படைப்புகள் மக்களைச் சென்றடையும் வகையில், தமிழக அரசு சார்பில் பிரத்யேகமாக ஒரு ஓடிடி தளத்தை உருவாக்க வேண்டும்.
2. கேளிக்கை வரி ரத்து:
திரையரங்கு தொழிலை ஊக்குவிக்கும் வகையில், உள்ளாட்சி அமைப்புகள் மூலம் விதிக்கப்படும் 4 சதவீத கேளிக்கை வரியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.
3. பைரசிக்கு எதிரான நடவடிக்கை:
திரைப்படங்களை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடும் பைரசி (Piracy) செயல்களைத் தடுக்க, அரசு சார்பில் மிகவும் வலுவான மற்றும் அதிநவீன தொழில்நுட்பக் குழு ஒன்றை அமைக்க வேண்டும்.
4. 5 காட்சிகள் திரையிட அனுமதி:
திரையரங்குகளில் பெரிய படங்களின் வெளியீட்டின் போதும், விடுமுறை நாட்களிலும் வசூலை அதிகரிக்க ஒரு நாளைக்கு 5 காட்சிகள் வரை படங்களை திரையிட அனுமதி வழங்க வேண்டும்.
5. ஓடிடி வெளியீட்டு கால அவகாசம் :
திரையரங்குகளுக்கு மக்கள் வருவதை உறுதி செய்ய, அனைத்து திரைப்படங்களையும் தியேட்டர்களில் வெளியாகி குறைந்தபட்சம் 8 வாரங்களுக்குப் பிறகே ஓடிடி தளங்களில் வெளியிட அனுமதிக்கும் விதியை அமல்படுத்த வேண்டும்.
6. படப்பிடிப்புக்கான ஊக்கத்தொகை:
தமிழகத்தில் திரைப்படப் பிடிப்புகளை அதிகப்படுத்த, ஒரு படத்தின் 50 சதவீத படப்பிடிப்பு தமிழகத்திற்குள் நடத்தப்பட்டால், அந்தப் படத்தின் தயாரிப்புச் செலவில் 10 சதவீதம் வரை அரசு சார்பில் ஊக்கத்தொகை (Subsidy) வழங்கும் திட்டத்தைக் கொண்டு வர வேண்டும்.