சினிமா செய்திகள்

"டிரீட்மென்ட் எடுக்கவே நேரமில்லை... இதுல காதலா?" - வதந்திகளுக்கு மிருணாள் தாகூர் அதிரடி பதில்

'டகோயிட்' படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மிருணாள், காதல் வதந்திகள் குறித்து மனம் திறந்து பேசினார்.

மும்பை:

தென்னிந்திய மற்றும் பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் மிருணாள் தாகூர், கடந்த சில மாதங்களாகத் தன்னைச் சுற்றி வரும் காதல் மற்றும் திருமண வதந்திகளுக்குத் பதிலடி கொடுத்துள்ளார்.

மிருணாள் தாகூர் ஒரு பிரபல நட்சத்திரத்தை காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின. குறிப்பாக, பிப்ரவரி மாதத்தில் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடக்கப் போவதாகக் கூட வதந்திகள் கிளம்பின. இதனை ஏற்கனவே அவர் மறுத்திருந்தார்.

இந்நிலையில், தனது லேட்டஸ்ட் படமான 'டகோயிட்' (Dacoit) படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மிருணாள், இந்த வதந்திகள் குறித்து மனம் திறந்து பேசினார்.

"தற்போது எனக்குக் காதலிக்க நேரமே இல்லை. எனது கால்ஷீட் முழுமையாகப் படப்பிடிப்புகளால் நிரம்பியுள்ளது. தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிச் சிந்திக்கக் கூட நேரமில்லாத அளவிற்கு பிஸியாக இருக்கிறேன். உண்மையைச் சொல்லப்போனால், எனது உடல்நலத்தைக் கவனிக்கக் கூட எனக்கு நேரம் கிடைப்பதில்லை. எனக்குக் காலில் தசைநார் கிழிவு (Ligament tear) ஏற்பட்டுள்ளது. எக்ஸ்ரே எடுத்த பிறகு அதற்கான சிகிச்சையை மேற்கொள்ளக் கூட நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறேன். அப்படி இருக்கும்போது காதலுக்கு எப்படி நேரம் ஒதுக்குவது?. யாரை காதலிக்கிறார் என்ற செய்திகளை விட, எனது திரைப் பயணத்தையும், நடிப்பையும் பற்றி மக்கள் பேச வேண்டும் என்றே நான் விரும்புகிறேன்" என்றார்.

அதிவி சேஷ் உடன் அவர் நடித்த 'டகோயிட்' திரைப்படம் கடந்த 10-ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இதற்கிடையே, வருண் தவானுடன் இணைந்து 'ஹை ஜவானி தோ இஷ்க் ஹோனா ஹை' என்ற படத்திலும் அவர் நடித்து வருகிறார்.