சினிமா செய்திகள்

ஆர்.ஆர்.ஆர் படத்தின் ரிலீஸ் தள்ளிவைப்புக்கு ஒமைக்ரான் மட்டும் காரணம் அல்ல...!

ஆந்திரத் திரையரங்கு உரிமையாளர்களுக்கும், சினிமா தயாரிப்பாளர்களுக்கும் கடந்த சில மாதங்களாகவே ஓயாத பிரச்சினையாக டிக்கெட் விலை இருந்துவருகிறது.

சென்னை,

பாகுபலி திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து ராஜமவுலி இயக்கத்தில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் இரத்தம் ரணம் ரெளத்திரம் (ஆர்.ஆர்.ஆர்). பிரபல தெலுங்கு நடிகர்கள் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் தயாராகி உள்ளது.

வருகிற 7-ந்தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்தியாவில் ஒமைக்ரான் பரவலின் காரணமாக நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து படக்குழு படத்தின் ரிலீஸை தள்ளி வைப்பதாக அறிவித்துள்ளது.

ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் முதலில் 2020 இறுதியில் திரைக்கு வருவதாக இருந்து, 2021 தொடக்கத்தில் வெளியாகும் என்றனர். பிறகு அக்டோபர் மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டது. பின்பு 2022 ஜுனவரி 7-ம் தேதி வெளியாகும் என அறிவித்தனர். இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளுக்கும் அந்தந்த மாநிலங்களில் புரமோஷன் நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.

இந்த நிலையில் ஒமைக்ரான் தொற்று அதிகமாக, பல மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கை அறிவித்தன. தமிழ்நாடு உள்பட பல மாநிலங்கள் திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என கட்டுப்பாடுகள் விதித்தன. ஏற்கனவே மகாராஷ்டிராவில் 50 சதவீத பார்வையாளர்கள்தான் அனுமதிக்கப்பட்டு வந்தனர். டெல்லி போன்ற மாநிலங்கள் முழுமையாக திரையரங்குகளை மூடும் முடிவை எடுக்க உள்ளன.

ஆர்ஆர்ஆர் பெரிய பட்ஜெட் திரைப்படம். இந்த கட்டுப்பாடுகள் படத்தின் வசூலை கண்டிப்பாக பாதிக்கும் ஆகவே, அவர்கள் படவெளியீட்டை தள்ளி வைத்துள்ளனர். ஆனால் ஆர்ஆர்ஆர் படத்தின் வெளியீட்டு தள்ளி வைப்புக்கு இதுமட்டுமே காரணம் அல்ல.

ஆந்திரத் திரையரங்கு உரிமையாளர்களுக்கும், சினிமா தயாரிப்பாளர்களுக்கும் கடந்த சில மாதங்களாகவே ஓயாத பிரச்சினையாக டிக்கெட் விலை இருந்து வருகிறது.

ஒய்.எஸ்.ஆர். ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆந்திர அரசு சில மாதங்கள் முன்பு தியேட்டர்களில் புதிய டிக்கெட் விலையை நிர்ணயம் செய்தது. அதன்படி, சினிமா அரங்குகளின் இருக்கை எண்ணிக்கையைப் பொறுத்து கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. கிராமப்புறம், நகரப்பகுதிகளில் உள்ள தியேட்டர்களுக்கு ஒவ்வொரு விகிதத்திலும் கட்டணம் விதிக்கப்பட்டது.

உதாரணத்துக்கு ஏசி வசதி கொண்ட சாதாரண தியேட்டர்கள் ரூ.150 வரையிலும், மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் அதிகபட்சமாக ரூ.250 வரையிலும், ஐமேக்ஸ் போன்ற பெரிய திரையரங்குகள் ரூ.300 வரையிலும் ஜிஎஸ்டி இல்லாமல் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது. இதுபோக பராமரிப்புக் கட்டணமாக ரூ.3 முதல் 5 வரை தனியாகக் கட்டணம் வசூலிக்கலாம் என்று ஆந்திர அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்தக் கட்டண உயர்வால் 300-க்கும் மேற்பட்ட திரையரங்குகள் மூடப்பட்டுவிட்டன.

அரசின் இந்த நடவடிக்கைக்கு தெலுங்கு திரையுலகில் கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. `பவர் ஸ்டார்' பவன் கல்யாணின் `வக்கீல் சாப்' படத்தின்போதே அறிவிக்கப்பட்ட கட்டண உயர்வு தற்போது நடைமுறைக்கு வந்து தெலுங்கு திரையுலகில் மீண்டும் புயலைக் கிளப்பி உள்ளது.

450 கோடி ரூபாய் பொருட்செலவில் தயாராகியுள்ள 'ஆர்.ஆர்.ஆர்' திரைப்படத்தின் வசூலில் இது பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், `எங்களுக்கு வேறு எந்த வாய்ப்பும் இல்லை' என்று படத்தின் வெளியீட்டைப் படக்குழு தள்ளிவைப்பதாக அறிவித்து இருக்கிறது.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு