சினிமா செய்திகள்

"இப்போதுள்ள சினிமாவில் முழு உண்மையைப் பேச முடியவில்லை" - சோனாக்சி சின்ஹா

இன்றைய காலகட்டத்தில் திரையுலகில் நிலவும் சமூக ஊடகங்களின் ஆதிக்கம் குறித்து சோனாக்சி சின்ஹா மனம் திறந்து பேசியுள்ளார்.

மும்பை,

பாலிவுட்டில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக வலம் வரும் சோனாக்சி சின்ஹா, இன்றைய காலகட்டத்தில் திரையுலகில் நிலவும் சமூக ஊடகங்களின் ஆதிக்கம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

தற்போது சோனாக்சி சின்ஹா ’சிஸ்டம்’ என்ற நீதிமன்றப் பின்னணி கொண்ட திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற 22-ம் தேதி அமேசன் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இந்நிலையில், ஒரு பேட்டியில் அவர் பேசுகையில், "சினிமாவில் நாம் முழு உண்மையை பேச முற்பட்டால், அந்தப் படத்திற்குப் பல்வேறு தடைகள் ஏற்படுகின்றன. இதனால் கதைகளைத் தேர்ந்தெடுப்பதிலும், உண்மைகளைச் சொல்வதிலும் திரையுலகினர் இப்போது மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுகிறார்கள். படைப்பாளிகளுக்கு இது சற்று கடினமான காலம். முன்பு இருந்த சுதந்திரம் இப்போது இல்லை.

கடந்த 2010-ல் 'தபாங்' படம் மூலம் நான் அறிமுகமான போது இருந்த நிலையை விட, இப்போது சினிமா முற்றிலும் மாறிவிட்டது. அப்போது சமூக ஊடகங்கள் இருந்தாலும், இப்போது அதன் ஆதிக்கம் அசுர வேகத்தில் வளர்ந்துள்ளது. இதனால் சினிமாத்துறை இன்னும் கடினமானதாக மாறியுள்ளது.

சில திரைப்படங்கள் எனக்குக் 'கெட்ட கனவாக' அமைந்தது உண்மைதான். கதை சொல்லப்படும் போது ஒரு விதமாகவும், படமாக்கப்படும் போது வேறு விதமாகவும் மாறிவிடும். இருப்பினும், நான் நடித்த எந்தப் படத்தையும் நான் குறை கூற மாட்டேன். எனது முழு சுயநினைவோடுதான் அந்தப் படங்களில் நடித்தேன். வாழ்க்கையில் அனைவரும் தவறுகள் செய்வது இயல்பு, அதைக் கடந்து நாம் முன்னேறிச் செல்ல வேண்டும்’ என்றார்.