சென்னை,
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நடிகை ஸ்ரீதேவி துபாயில் நடந்த திருமண விழாவில் பங்கேற்க சென்ற போது நேற்றிரவு மாரடைப்பால் உயிரிழந்தார்.
அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.
அவரது மறைவை என்னால் நம்ப முடியவில்லை. அவருடன் ஒரு படத்தில் நடித்து முடித்ததை பாக்கியமாக கருதுகிறேன் என நடிகை ராதா கூறியுள்ளார்.
வாழ்க்கை கணிக்க முடியாதது. அடுத்து என்ன நடக்கும் என்பது நமக்கு தெரியாது. குழந்தைத்தனம் நிறைந்த மிக மென்மையுடன் பேச கூடிய பெண்ணாகவே வாழ்ந்தவர் என நடிகை குஷ்பூ டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இந்திய சினிமாவுக்கு பெரும் இழப்பு என நடிகை சுகன்யா தெரிவித்துள்ளார். நடிகை ஸ்ரீதேவியின் மரணம் நம்ப முடியவில்லை. வருத்தம் அளிக்கிறது என நடிகை நக்மா தெரிவித்துள்ளார்.
அவர் மண்ணை விட்டு மறைந்தபொழுதும் அவரது சிரிப்பு நம் கண்களை விட்டு மறையாது. தெற்கில் இருந்து இந்திக்கு சென்றவர்களில் சிறந்த வெற்றி பெற்றவர் என இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
மூத்த நடிகன் என்பதனை விட அவருக்கு ஒரு ரசிகராகவே நான் இருந்தேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் என நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
நிலா உச்சி வானத்திற்கு வந்தபொழுது மறைந்து விட்டது என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
மிகுந்த அர்ப்பணிப்பும், நேசிப்பும் கொண்டவர் என இயக்குநர் சிம்புதேவன் தெரிவித்துள்ளார்.
நடிகை ஸ்ரீதேவியின் மறைவு துரதிருஷ்டவசம் நிறைந்தது என இந்தி நடிகர் அக்ஷய் குமார் தெரிவித்துள்ளார்.
நடிகை ஸ்ரீதேவி நம்மிடையே இல்லை என்பது வருத்தம் தருகிறது. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன் என பிரபல கிரிக்கெட் வீரரான சச்சின் தெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.