சென்னை,
திரைப்படங்களில் தாங்கள் ஏற்கும் கதாபாத்திரங்களுக்காக உடல் அமைப்பை மாற்றுவது சினிமாத்துறையில் பொதுவான ஒன்று. பெரும்பாலான ஹீரோக்கள் இதுபோன்ற முயற்சிகளில் ஈடுபடும் நிலையில், தற்போது சில கதாநாயகிகளும் கதாபாத்திரங்களின் தேவைக்கேற்ப தங்களது உடல் எடையைக் கூட்டியோ அல்லது குறைத்தோ உடலமைப்பை மாற்றி வருகின்றனர். இதற்காக அவர்கள் ஜிம்மில் கடினமாக உடற்பயிற்சி செய்து தங்களை பிட்டாக வைத்துக் கொள்கிறார்கள்.
இருப்பினும், சில நடிகைகள் உடல் எடையைக் குறைக்க அறுவை சிகிச்சை செய்து கொள்வதாகவும் திரையுலகில் வதந்திகள் பரவுவதுண்டு. அந்த வகையில், சமீபத்தில் உடல் எடையைக் குறைத்தது குறித்துப் பரவிய வதந்திகளுக்குப் நடிகை கீர்த்தி சுரேஷ் பதிலடி கொடுத்துள்ளார்.
சமீபத்தில் சற்று உடல் எடை கூடியிருந்த கீர்த்தி சுரேஷ், திடீரென மிகவும் ஒல்லியாக மாறி புதிய தோற்றத்தில் அனைவருக்கும் அதிர்ச்சியளித்தார். இதைப் பார்த்த சிலர், கீர்த்தி சுரேஷ் உடல் எடையைக் குறைக்க அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக சமூக வலைதளங்களில் வதந்திகளைப் பரப்பினர். இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தான் ஜிம்மில் கடினமாக உடற்பயிற்சி செய்யும் வீடியோவை பகிர்ந்து டிரோலர்களின் வாயை அடைத்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.
அந்த வீடியோவுடன் அவர் பகிர்ந்த பதிவில், "நான் 2013-ல் எனது சினிமா பயணத்தைத் தொடங்கிய போது பிட்னஸ் பற்றி எதுவும் தெரியாது. ஜிம் எல்லாம் நமக்குச் செட் ஆகாது என்றுதான் நினைத்தேன். ஆனால், 2018-ல் 'மகாநதி'(நடிகையர் திலகம்) படத்திற்குப் பிறகு பிட்னஸ் மீது கவனம் செலுத்த விரும்பினேன். அதன்படி, சரியான உடற்பயிற்சிகள் மற்றும் டயட் மூலமாக 9 மாதங்களில் 10 கிலோ எடையைக் குறைத்தேன்.
ஆனால், சிலர் 'நீ பார்க்க ரொம்ப ஒல்லியா இருக்க, உடல் எடையை குறைக்க ஏதாச்சும் சர்ஜரி பண்ணிட்டியா?' என்று கேட்கிறார்கள். இது எனக்கு மிகுந்த மனவருத்தத்தை அளித்தது. நான் சற்று குண்டாக இருந்தபோது 'உடல் எடையை குறை' என்று சொன்ன அதே மனிதர்கள்தான், இப்போது நான் எடையைக் குறைத்த பிறகு 'பழையபடி இருந்தாத்தான் நீ அழகா இருக்க' என்று சொல்கிறார்கள். இந்த உலகம் என்னதான் நினைக்கிறது என்று எனக்குப் புரியவில்லை" என்று கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.