புனே,
மராட்டிய மாநிலம் மலாட் (மேற்கு) நகரில் சின்சோலி பந்தர் பகுதியில் நேகா என்ற அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் சமீர் சர்மா. இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமடைந்த இவர், ஊரடங்கால் தொடர்ந்து நடிக்க முடியாமல் இருந்துள்ளார்.
இந்நிலையில், நேற்றிரவு அவரது குடியிருப்பில் மர்ம மரணம் அடைந்து கிடந்துள்ளார். அவருக்கு அருகில் தற்கொலை செய்து கொண்டதற்கான குறிப்பு எதுவும் கிடைக்கவில்லை. 2 நாட்களுக்கு முன்பே அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்க கூடும் என போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
அவர், மனைவியிடம் விவாகரத்து பெற்ற நிலையில், கடந்த பிப்ரவரியில் இருந்து தனியாக வசித்து வந்துள்ளார்.
சமீரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து கொண்ட அவருடன் தொடரில் நடித்த சஞ்சீவ் சேத் கூறும்பொழுது, படப்பிடிப்பின்போது தளத்தில் அவரை சந்தித்துள்ளேன். நாங்கள் நன்றாகவே நடித்தோம். அவர் நடந்து கொள்ளும் முறையை வைத்து, அவர் இதுபோன்ற ஒரு முடிவை தேடி கொள்வார் என ஒருவரும் நினைத்தது கூட இல்லை. விவாகரத்து பெற்று தனியாக வசிக்கிறார் என எங்களுக்கு தெரியும். ஆனால், தொழிலில் ஈடுபாடுடையவர். நன்கு பழக கூடியவர்.
ஊரடங்கால் கடந்த சில மாதங்களாக அவரை தொடர்பு கொள்ளவில்லை. இந்த செய்தி எனக்கும், படப்பிடிப்பு குழுவினருக்கும் அதிர்ச்சி அளிக்கிறது என கூறினார்.
இதேபோன்று மற்றொரு நடிகர் அவினேஷ் சச்தேவ் கூறும்பொழுது, நண்பர்களான நாங்கள் ஊரடங்கிலும் தொடர்ந்து பேசி கொண்டு இருந்தோம்.
அவருக்கு நிதி சுமையோ, மன அழுத்தமோ, தொழில் அடிப்படையிலான அல்லது தனிப்பட்ட விவகாரங்களால் எந்த நெருக்கடியும் இல்லை என நினைக்கிறேன். மிக மகிழ்ச்சியான, அதிர்ஷ்டசாலியான நபராகவே இருந்தவர். வாழ்க்கையை மகிழ்ச்சியாக எடுத்து கொண்டவர். கடந்த ஜூலை 22ந்தேதி கூட நாங்கள் பேசி கொண்டோம். அதில், நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை விவகாரம் பற்றி கூட நாங்கள் விவாதித்தோம். தற்கொலை ஒருபொழுதும் ஒரு தீர்வாகாது என சமீர் கூறினார்.
அவர் கவிதைகள், வலைதொடர்கள் எழுதியுள்ளார். இசையமைத்தும் உள்ளார். மனஅழுத்தம் இருந்தது பற்றி எந்த உரையாடலும் எங்களுக்கு இடையே நடந்தது இல்லை. ஏன் இப்படி நடந்தது என தெரியவில்லை என தெரிவித்து உள்ளார்.
இதனால், சமீர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவர் மரணத்திற்கு வேறு ஏதேனும் விசயங்கள் இருக்கின்றனவா? என்பது பற்றி போலீசார் விசாரணை முடிவில் தெரிய வரும் என கூறப்படுகிறது.