சென்னை,
சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில், சினிமாத்துறையின் நலன் கருதி அதிரடியான பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. குறிப்பாக, நடிகர்களின் சம்பள முறை மற்றும் ஓடிடி வெளியீடு தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
முக்கிய தீர்மானங்கள்:
சிறிய முதலீட்டுத் திரைப்படங்களுக்கு தமிழக அரசு வழங்கும் மானியம் கடந்த 10 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. இதனைப் புதிய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது ஓடிடி மற்றும் சாட்டிலைட் வியாபாரம் சரிந்து வருவதால், தயாரிப்பாளர்களின் நஷ்டத்தைக் குறைக்க, ஆந்திர மாநிலத்தைப் போல நடிகர்களும் தொழில்நுட்பக் கலைஞர்களும் வருவாய் பகிர்வு முறையில் பணியாற்ற வேண்டும். இனி நடுத்தர மற்றும் பெரிய பட்ஜெட் படங்கள் இந்த முறையிலேயே தயாரிக்கப்படும்.
நடிகர்கள் வருவாய் பகிர்வு முறையில் நடிக்க முன்வர வலியுறுத்தி, முதற்கட்டமாக மே 2-ஆம் தேதி அடையாள வேலைநிறுத்தம் செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சுமூக முடிவு எட்டப்படாவிட்டால் தொடர் வேலைநிறுத்தம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
8 வாரங்களுக்கு முன்பே ஓடிடியில் படத்தை வெளியிடக் கூடாது எனத் தயாரிப்பாளர்களை நிர்பந்திப்பதற்கு சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தென்னிந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் ஒன்றிணைந்து மே 10-ல் ஆலோசனைக் கூட்டம் நடத்தவுள்ளனர்.
சங்கத்திற்குத் தெரியாமல் ஓடிடி ஒப்பந்தங்கள் குறித்து கடிதம் அளிக்கும் தயாரிப்பாளர்களுக்குத் திரையுலகம் ஒத்துழைப்பு வழங்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.