சினிமா செய்திகள்

தயாரிப்பாளர் கே.ராஜன் மறைவுக்கு தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் இரங்கல்

கே.ராஜனின் மறைவு தமிழ் திரையுலகினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை,

தயாரிப்பாளர் கே.ராஜன் மறைவுக்கு, தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க உறுப்பினர் கே.ராஜன் மறைவு திரை உலகிற்கு பெரும் இழப்பு. தமிழ் திரை உலகின் மீது அக்கறை கொண்டவர் சினிமா மீது அதீத பாசம் கொண்டவர். தயாரிப்பாளராக இயக்குநராக, நடிகராக தனது 65 வயதிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்.

குறிப்பாக சிறு முதலீட்டு படங்களுக்கு எல்லாம் ஆதரவாக நின்றவர். ஒரு காலத்தில் திருட்டு விசிடிக்கு எதிராக தனி ஆளாக போராடியவர். சுருக்கமாகச் சொன்னால் அவர் திரைத்துறை போராளி, அவரின் இழப்பு தாங்கிக்கொள்ள முடியாதது. அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு எல்லா வகையிலும் துணை நிற்கவும். அவரின் ஆத்மா சாந்தியடையவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்’இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னைச் சேர்ந்த பிரபல தயாரிப்பாளர் மற்றும் நடிகர் கே. ராஜன் (வயது 85). 1983-ல் 'பிரம்மச்சாரிகள்' படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமான அவர், 'டபுள்ஸ்', 'அவள் பாவம்', 'நினைக்காத நாளில்லை' உள்ளிட்ட பல படங்களை தயாரித்தார். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் துணைத்தலைவராகவும், செயலாளராகவும் பணியாற்றினார்.

உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தயாரிப்பாளர் கே.ராஜன் நேற்று சென்னை அடையாறு ஆற்றில் குதித்து உயிரை மாய்த்துகொண்டுள்ளார். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கே.ராஜனின் திடீர் தற்கொலை முடிவு, தமிழ் திரையுலகினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.