சென்னை,
தமிழ்த் திரையுலகில் வாழ்நாள் முழுவதும் சிறந்து விளங்கிய கலைஞர்களை கவுரவிக்கும் வகையில் வழங்கப்படும் “முத்தமிழறிஞர் கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர்” விருதுக்கு 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளுக்கான விருதாளர்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, 2024 ஆம் ஆண்டுக்கான விருதுக்கு பழம்பெரும் நடிகை எம்.என். ராஜம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழ் சினிமாவின் ஆரம்ப காலத்திலிருந்து பல்வேறு கதாபாத்திரங்களில் தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி, நீண்ட காலமாக ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் எம்.என். ராஜம். அவரது கலைப் பங்களிப்பை பாராட்டும் விதமாக இந்த விருது வழங்கப்படுகிறது.
அதேபோல், 2025 ஆம் ஆண்டுக்கான “கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர்” விருதுக்கு புகழ்பெற்ற இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழ்த் திரையுலகில் எண்ணற்ற வெற்றிப் படங்களை இயக்கி, பல நட்சத்திர நடிகர்களின் திரைப்பயணத்தில் முக்கிய பங்காற்றியவர் எஸ்.பி. முத்துராமன்.
“கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர்” விருது 2022 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.