தமிழக சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளில் எடப்பாடி தொகுதியைத் தவிர்த்து மொத்தம் 233 தொகுதிகளில் தனித்து போட்டியிட்ட த.வெ.க., 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தேர்தலில் வெற்றி பெற்ற விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கு பல தரப்பிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. தமிழ்நாட்டின் 50 ஆண்டுகால திராவிட ஆட்சிகள் முடிவுக்கு வந்திருக்கின்றன. 2024-ம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக கட்சி தொடங்கி, 2026-ம் ஆண்டு மாபெரும் கட்சியாக தமிழக வெற்றிக் கழகம் உருவாகியிருக்கிறது.
கோவையில் உள்ள தனியார் மருத்துவமனை நிகழ்ச்சியில் நடிகர்கள் சிவக்குமார் மற்றும் சத்யராஜ் கலந்து கொண்டனர். பிறகு செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கருத்துகளை இருவரும் பகிர்ந்துகொண்டனர்.
சத்யராஜ் பேசும்போது, “உடல் ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி மிகவும் அவசியம். மனதை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும். போதை பழக்கத்திலிருந்து இளைஞர்கள் விலக வேண்டும்.. விஜய் அரசு டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று கூறியது பாராட்டுக்குரியது” என்றார்.
நடிகர் சிவக்குமார் பேசுகையில், “என்னுடைய ஆரோக்கியத்திற்கு முக்கிய காரணம் ஒழுங்கான வாழ்க்கை முறை தான். காபி, டீ குடிக்காமல் வாழ்ந்து வருகிறேன். இன்றைய காலத்தில் குடும்பத்தினர் அனைவரும் செல்போனில் மூழ்கி தனித்தனியாக இருக்கிறார்கள். செல்போனை விட்டு குடும்பத்துடன் அமர்ந்து பேச வேண்டும். நண்பர்களுடன் மனம் திறந்து பேசுவது மனநலத்திற்கு நல்லது. எனக்கு தற்போது 85 வயது. தினமும் நண்பர்களுடன் நீண்ட நேரம் பேசுவேன்.
அரசியலை பொறுத்தவரை, காமராஜர் 9 வருடம் சிறையில் இருந்தார்.. 9 வருடம் நாட்டை ஆண்டார்.. அவர் சாகும்போது தலைமாட்டில் 140 ரூபாயும், 2 ஜோடி செருப்பு, 4 ஜோடி சட்டைகள், ஐந்தாறு புத்தகங்கள் மட்டுமே இருந்தன.. இதுதான் இவரது மொத்த சொத்தும்.. இப்படியொரு தலைவரை பார்க்க முடியுமா? அப்படிப்பட்ட காமராஜரையே மக்கள் தோற்கடித்தார்களே? ஏனென்றால் அப்போது காமராஜர் தேவையில்லை, மாற்றம் வேண்டும் என்றார்கள்..
இன்று திமுக, அதிமுக பிடிக்காமல்தான் விஜய்க்கு வாக்களித்திருக்கிறார்கள். யார் வேண்டும் என்று மக்கள்தான் முடிவு செய்கிறார்கள்.. மக்கள்தான் நீதிபதிகள். மக்கள் அப்படி முடிவு செய்தால் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். 90 சதவீதம் முதல் முறையாக ஓட்டுப்போடுகிறவர்கள் காசு வாங்காமலேயே ஓட்டுப்போட்டுள்ளனர்.. என்னுடைய பேரன்கள், பேத்திகள் ஓட்டுப்போடுகிறார்கள்.. அவர்கள்தான் இனி வருங்காலம். அவர்கள் தங்கள் தலைவனை தேர்ந்தெடுக்கும்போது அதை தவறு என்று சொல்ல நீங்கள் யார்? விஜய் நல்லது செய்வார் என்று நம்புவோம்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.
சிவகுமார் தவெக அரசு பற்றி பேசியபோது, அருகிலேயே நடிகர் சத்யராஜும் உடனிருந்தது கவனம் பெற்று வருகிறது.
திமுக கட்சியின் தீவிர ஆதரவாளரான நடிகர் சத்யராஜ் சமீபத்தில் வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் “திராவிட மாடல் அரசின் நிலைப்பாட்டின் காரணமாக நான் கடந்த ஐந்து ஆண்டுகளாக திராவிட மாடல் அரசுக்கும், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுக்கும் ஆதரவாளனாக இருந்தேன். இனிவரும் காலங்களிலும் அதேபோல் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், என்னுடைய ஆதரவு இன்னும் வலுவாக இருக்கும் என்று பெருமையோடும், மன உறுதியோடும், மன மகிழ்வோடும் மகிழ்ச்சியோடும் கூறிக்கொள்கிறேன்” என குறிப்பிட்டிருந்தார்.