சினிமா செய்திகள்

விவாகரத்து சர்ச்சையில் சர்வானந்த்?... இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள் நீக்கம் - ரசிகர்கள் அதிர்ச்சி

"எங்கேயும் எப்போதும்" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சர்வானந்த்.

ஐதராபாத்,

தெலுங்கு சினிமாவில் அடுத்தடுத்த வெற்றிகளைத் தந்து வரும் நடிகர் சர்வானந்த், தற்போது விவாகரத்து வதந்தியில் சிக்கியுள்ளார். அவருக்கும் அவரது மனைவி ரக்சிதா ரெட்டிக்கும் இடையே விவாகரத்து நடக்கப்போவதாகச் சமூக வலைதளங்களில் வதந்திகள் காட்டுத்தீயாகப் பரவி வருகின்றன.

"எங்கேயும் எப்போதும்" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சர்வானந்த் தனது அதிகாரபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து தனது திருமணப் புகைப்படங்கள் மற்றும் தனது மகள் லீலா தேவி மைனேனியுடன் இருந்த சில பதிவுகளையும் நீக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதுவே இந்த விவாகரத்து வதந்திகளுக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது. கடந்த ஆண்டு இது போன்ற செய்திகள் வந்தபோது சர்வானந்த் தரப்பு அதனை மறுத்திருந்தது. ஆனால், தற்போது புகைப்படங்கள் நீக்கப்பட்டிருப்பது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், விவாகரத்து குறித்து சர்வானந்த் தரப்பிலிருந்து இதுவரை எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை.

சர்வானந்த் - ரக்சிதா ரெட்டி திருமணம் கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் 3-ம் தேதி ஜெய்ப்பூரில் மிகப்பிரமாண்டமாக நடைபெற்றது. ரக்சிதா அமெரிக்காவில் பணியாற்றிய மென்பொறியாளர் ஆவார். இந்தத் தம்பதிக்கு கடந்த 2024 மார்ச் மாதம் ஒரு பெண் குழந்தை பிறந்தது.

தனிப்பட்ட வாழ்க்கையில் குழப்பங்கள் இருந்தாலும், சர்வானந்தின் சினிமா பயணம் ஏறுமுகமாகவே உள்ளது. இந்த ஆண்டு பொங்கலுக்கு (ஜனவரி 14) வெளியான ’நாரி நாரி நடும முராரி’ படம் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது. சமீபத்தில் ஏப்ரல் 3-ம் தேதி வெளியான ’பைக்கர்’ படத்தில் 'விக்கி' என்ற மோட்டோகிராஸ் வீரராக சர்வானந்த் மிரட்டியிருந்தார். இதற்கு விமர்சகர்களிடம் கலவையான விமர்சனங்கள் வந்தாலும், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது சர்வானந்த் 'போகி' (Bhogi) படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். பீரியட் ஆக்‌சன் படமாக உருவாகும் இது வரும் ஆகஸ்ட் 28 அன்று வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது.