சினிமா செய்திகள்

லோகேஷ் கனகராஜ் ஏன் வாக்களிக்கவில்லை? - ஆர்.ஜே.பாலாஜி விளக்கம்

லோகேஷ் கனகராஜ் வாக்களிக்க முடியாமல் போனது ஏன் என்ற கேள்விக்கு ஆர்.ஜே.பாலாஜி பதிலளித்துள்ளார்.

சென்னை,

இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘29’ திரைப்படத்தின் அறிமுக விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட நடிகர் மற்றும் வர்ணனையாளர் ஆர்.ஜே.பாலாஜி, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மீதான தேர்தல் சர்ச்சை குறித்து முக்கியமான விளக்கத்தை அளித்தார்.

நடந்து முடிந்த தேர்தலில் முன்னணி இயக்குநரான லோகேஷ் கனகராஜ் ஏன் வாக்களிக்க வரவில்லை என சமூக வலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். இது பெரும் விவாதமாக மாறிய நிலையில், ஆர்.ஜே.பாலாஜி அதற்குப் பதிலளித்துள்ளார்.

விழாவில் பேசிய ஆர்.ஜே.பாலாஜி கூறியதாவது: "நான் சென்னையில் வாக்களித்துவிட்டு, ஐபிஎல் கிரிக்கெட் கமெண்ட்ரி செய்வதற்காக மும்பைக்கு கிளம்பினேன். அதே நேரத்தில் லோகேஷ் கனகராஜ் தனது வேலைகளை முடித்துவிட்டு, வாக்களிப்பதற்காக சென்னையிலிருந்து கோவைக்குச் செல்ல விமான நிலையம் வந்திருந்தார்.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவர் விமான நிலையம் வருவதற்குள் கேட் (Gate) மூடப்பட்டுவிட்டது. இதனால் அவரால் அந்த விமானத்தைப் பிடிக்க முடியவில்லை. அந்த ஒரே காரணத்தினால்தான் அவரால் கோவை சென்று வாக்களிக்க முடியாமல் போனது" என்றார்.