ஐதராபாத்,
பிரபல தெலுங்கு யூடியூபர் கோமளி(21) தற்கொலை செய்து கொண்டதாக வெளியாகி இருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பக்கட்ட விசாரணையில் காதல் பிரச்சினையே இந்த துயர சம்பவத்திற்கான காரணம் என கூறப்படுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக மற்றொரு யூடியூபர் ஒருவரை அவர் காதலித்து வந்ததாகவும், கருத்து வேறுபாடு காரணமாக ஒரு ஆண்டுக்கு முன்பு இருவரும் பிரிந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் கோமளி மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது.
சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோமளியின் மரணம் அவரது குடும்பத்தினரையும் நண்பர்களையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
மல்லாரெட்டி பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.சி படித்து வந்த கோமளி, யூடியூப் வீடியோக்கள் மூலம் நல்ல வரவேற்பும் ரசிகர் ஆதரவும் பெற்றிருந்தார். இளம் வயதிலேயே சமூக வலைதளங்களில் பிரபலமானார்.
உங்களுக்கு அல்லது உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு மன அழுத்தம் இருந்தால், உடனடியாக மனநல உதவி மையங்களை அணுகுங்கள்.