கதையின் கரு: அஞ்சலி, அவருடைய அம்மாவுக்கு ஒரே மகள். அம்மா, பெற்றோர்களை மீறி காதல் திருமணம் செய்து கொண்டதால் தாத்தாவுக்கும், பாட்டிக்கும் கோபம். அவர்களின் கோபத்தை தணித்து, அம்மாவுடன் சேர்த்து வைக்க அஞ்சலி விரும்புகிறார்.
தாத்தாவும், பாட்டியும் ஒரு மலை கிராமத்தில் வசிக்கிறார்கள். அவர்களை பார்க்க அஞ்சலி நண்பன் சாம் ஜோன்சுடன் மலை கிராமத்துக்கு பயணம் ஆகிறார். தாத்தா-பாட்டியின் வீடு அடர்ந்த காட்டுக்குள் இருக்கிறது. அக்கம் பக்கத்தில் வீடுகளே இல்லை. மர்ம பங்களா போல் எப்போதும் பூட்டியே இருக்கிறது. தாத்தாவும், பாட்டியும் கூட இயல்பாக இல்லை.
இருவரும் உண்மையான தாத்தா-பாட்டி இல்லை என்பது தெரிந்ததும், அந்த வீட்டுக்குள் இருந்து அஞ்சலியும், சாம் ஜோன்சும் தப்பிக்க முயற்சிக்கிறார்கள். இருவரையும் மர்ம தாத்தாவும், பாட்டியும் கொல்ல முயற்சிக்கிறார்கள். அவர்களிடம் இருந்து அஞ்சலியும், சாம் ஜோன்சும் எப்படி தப்புகிறார்கள்? என்பது இருக்கை நுனியில் அமர வைக்கும் கிளைமாக்ஸ்.
அஞ்சலி மெருகேறி இருக்கிறார். நடிப்பிலும், உடற்கட்டிலும்...! அம்மாவுக்கு ஒரு துணையை சேர்த்து வைத்து விட்டு, அவர் வெளிநாடு செல்ல விரும்புவது போல் தமாசாக ஆரம்பிக்கிறது, படம். அவர் அந்த மலை கிராமத்துக்கு புறப்பட்டதும், படத்தில் ஒரு எதிர்பார்ப்பு உருவாகிறது. ஆள் நடமாட்டம் இல்லாத நடுக்காட்டில், அந்த மர்ம பங்களாவை பார்த்ததும், இதய துடிப்பு அதிகமாகிறது.
வித்தியாசமான தலைமுடியுடன் கூடிய தாத்தா (மகராந்த் தேஷ்பாண்டே), பார்வையிலேயே பயமுறுத்தும் பாட்டி (சலீமா) ஆகிய இருவரும் திகில் கூட்டும் சிறப்பான தேர்வு. அவர்களின் மர்மமான நடவடிக்கைகள் பயமுறுத்துகின்றன. அஞ்சலியின் நண்பராக வரும் சாம் ஜோன்ஸ், தமாசான நாயகன்.
யோகி பாபு, இரண்டே இரண்டு காட்சிகளில் வருகிறார். அந்த இரண்டு காட்சிகளும் கலகலப்பு. பிரம்மானந்தமும் சிரிக்க வைக்கிறார். போலீஸ் அதிகாரியாக வரும் மைம்கோபி, கிளைமாக்ஸ்சில் ஆஜர்.
பசுமை போர்த்திய மலைகள், அதற்கு மத்தியில் ஒரு மர்ம பங்களா என படப்பிடிப்புக்காக தேர்வு செய்த இடத்துக்கு அதிக மார்க் கொடுக்கலாம். ஒளிப்பதிவு யார்? என்று கேட்க தூண்டுகிறது. ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையாவுக்கு விருது கொடுத்து பாராட்டலாம். சந்தோஷ் தயாநிதியின் பின்னணி இசை, மிரட்டல்.
வழக்கம்போல் கடைசி நேரத்தில் வந்து நிற்கும் போலீஸ், கணவரை தேடி மர்ம பங்களாவுக்கு வந்த பெண் யார்? அவருடைய கணவருக்கு என்ன ஆனது? என்ற விடை தெரியாத கேள்விகள், படத்தின் பலவீனங்கள். இவை தெரியாத அளவுக்கு விறுவிறுப்பான திரைக்கதை படத்தை காப்பாற்றுகிறது.