செங்கல்பட்டு மாவட்டம் சாஸ்திரம்பாக்கத்தில் தையல்நாயகி சமேத வட வைத்தீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது.
பல நூறு ஆண்டுகள் பழமைவாய்ந்த இக்கோவில், காலப்போக்கில் சிதலமடைந்து மண்மூடி, முட்புதர்கள் நிறைந்து காணப்பட்டது. இந்நிலையில் இப்பகுதியை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு இளைஞன், இத்தலத்தில் மண்மூடி கிடந்த லிங்கத் திருமேனிக்கு தினமும் விளையாட்டாக தண்ணீர் ஊற்றி வந்தான். தன்னை அறியாமலே சிவபூஜை செய்து வந்த அந்த இளைஞன், இத்தல இறைவன் அருளால் மனநலம் சரியாகி ஆரோக்கியம் பெற்றான். இதையடுத்து அந்த இளைஞன், மண் மூடிகிடந்த சிவலிங்கத்தை வெளியே எடுத்து அபிஷேகம் செய்து வழிபட்டான்.
மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞன் இவ்வாறு செய்வதைக் கண்டு ஊர் மக்கள் ஆச்சரியப்பட்டனர். இதுப்பற்றி அந்த இளைஞனிடம் கேட்டபோது, “நான் முழுமையாக குணமடைந்துவிட்டேன். இதற்கு இந்த இறைவன்தான் காரணம்" என்றான்.
இதையடுத்து, ஊர் மக்கள் ஒன்றுசேர்ந்து இறைவனுக்கு குடில் அமைத்து வழிபாடு செய்து வந்தனர். இத்தல இறைவனை வழிபட்டு வந்த மக்களின் வாழ்வில் வளம்பெற்றன. இதையடுத்து இறைவன் இருந்த குடிலை கோவிலாக மாற்றினர்.
இக்கோவிலில் உள்ள பல கல்வெட்டுகள் சிதலமடைந்து விட்டன. இருப்பினும் கிடைத்த சில குறிப்புகளின் மூலம், புராணகாலத்தில் இத்தல இறைவனின் திருநாமம் 'மிருத்யுஞ்சயேஸ்வரர்' என்று இருந்துள்ளது. பின்பு, இத்தலம் வரும் பக்தர்களின் நோய்களை தீர்த்து அருளியதால் இறைவனுக்கு 'வைத்தீஸ்வரர்' என்று பெயர் சூட்டினர்.
தெற்கில் உள்ள வைத்தீஸ்வரம் போலவே இத்தல இறைவனின் திருநாமமும் இருப்பதால் இவர் 'வட வைத்தீஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார். தையல் நாயகி என்று அழைக்கப்படும் அன்னை, முன்பு பாலாம்பிகை எனும் 'பவரோகவிநாசினி' என்று அழைக்கப்பட்டுள்ளார்.
பல்லவர் காலத்தில் கட்டப்பட்டதாக கருதப்படும் இந்த ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. உள்ளே நுழைந்ததும், முற்றிலும் செங்கல்லால் அமைக்கப்பட்ட பதினாறு கால் மண்டபம் உள்ளது. கருவறையில் இறைவன் வட வைத்தீஸ்வரர் லிங்கத் திருமேனியராக கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். இவரை நோக்கியவாறு நந்தி தேவர் காணப்படுகிறார். கருவறை வாசலின் இருபுறமும் விநாயகப் பெருமானும், முருகப்பெருமானும் உள்ளனர். இறைவனின் இடதுபக்கம் தனிச் சன்னிதியில் அன்னை தையல்நாயகி கமல பீடத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். அன்னையின் சன்னிதி அருகே, இறைவனை நோக்கியவாறு கால பைரவர் நாய் வாகனத்துடன் காட்சி தருகிறார்.
பிரகாரத்தில் பரிகார தெய்வங்களாக நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, சண்டிகேஸ்வரர், துர்க்கா தேவி ஆகியோர் காட்சி அளிக்கின்றனர். காசி விஸ்வநாதர் சன்னிதியும் உள்ளது. குபேர மூலையில் லட்சுமிக்கும். கணபதிக்கும் தனிச் சன்னிதி உள்ளன. வாயு மூலையில் வள்ளி தெய்வானை சமேத சண்முகநாதர்
தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கிறார். இந்த ஆலயத்தில் கொடிமரமும், நவக்கிரகங்களும் இல்லை. கோவில் தல விருட்சமாக அரச மரம் உள்ளது.
ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் சித்தர்கள். கருங்குருவி வடிவிலும், வண்டு வடிவிலும் வந்து இத்தல இறைவனை வழிபாடு செய்வதாக நம்பப்படுகிறது. ஒவ்வொரு சிவராத்திரி அன்றும் கலையில் சூரியக் கதிர்கள் இத்தல இறைவனின் லிங்கத் திருமேனியில் விழுவது அற்புதக் காட்சியாகும்.
இத்தல இறைவனான வட வைத்தீஸ்வரர், வந்த பிணி, வரப்போகும் பிணிகளை போக்கும் வல்லமை படைத்தவராக உள்ளார். எனவே இவரை வழிபட்டு வந்தால் கண் நோய்கள், மனநலப் பிரச்சினைகள், நாள்பட்ட நோய்கள் போன்ற சகல நோய்களும் நீங்கி, ஆரோக்கிய வாழ்வு வாழலாம் என்பதும், மக்களின் மனக் கஷ்டம், பணக் கஷ்டம் விலகி இன்பமாக வாழலாம் என்பதும் இங்கு வரும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. தையல்நாயகி அன்னையை வழிபட்டு வந்தால் திருமண பாக்கியம் கிடைக்கும். மாங்கல்ய பலம் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.
இந்த ஆலயத்தில் ஒரு வேளை பூஜை மட்டுமே நடைபெறுகிறது. கோவில், காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.
சென்னையில் இருந்து செங்கல்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது சிங்கப்பெருமாள்கோவில். இங்கிருந்து பாலூர் செல்லும் சாலையில் சுமார் 9 கிலோமீட் டர் தொலைவில் சாஸ்திரம்பாக்கம் வட வைத்தீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. சென்னையில் இருந்து 58 கிலோமீட்டர் தொலைவிலும், செங்கல்பட்டில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலும் இக்கோவில் உள்ளது.