சென்னை வியாசர்பாடி மூர்த்திங்கர் தெருவில் சுமார் 800 ஆண்டுகள் பழமையான மரகதாம்பாள் உடனுறை ரவீஸ்வரர் கோவில் உள்ளது. கோவிலில் உள்ள மூலவர் சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி படும் அரிய நிகழ்வு இங்கு நடைபெறும். ஆனால் இந்த கோவில் முன்பு உள்ள சாலை உயர்த்தப்பட்டதால், சாலையில் இருந்து சுமார் 5 அடி பள்ளத்தில் கோவில் அமைந்தது. இதனால் கடந்த சில ஆண்டுகளாக சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளிபடும் அரிய நிகழ்வு நடைபெறாமல் இருந்தது.
இதையடுத்து பக்தர்களின் கோரிக்கையை ஏற்று இந்து சமய அறநிலைத் துறை மற்றும் உபயதாரர்களின் ஒத்துழைப்போடு சுமார் ரூ.2 கோடி செலவில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஜாக்கிகள் மூலம் தமிழகத்திலேயே முதல் முறையாக 11.2 அடிக்கு தரை தளத்திலிருந்து கோவில் உயர்த்தப்பட்டது. இதையடுத்து கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.
இதையொட்டி 4 கால யாக சாலை பூஜைகள், ஹோமங்கள் நடைபெற்றது. பின்னர் யாக சாலையில் இருந்து புனிதநீர் கலசம் எடுத்து வரப்பட்டு ராஜகோபுரம் மற்றும் விமான கோபுர கலசங்களுக்கும், அதை தொடர்ந்து மூலவர் ரவீஸ்வரர் மற்றும் இதர தெய்வங்களுக்கும் மகா கும்பாபிஷேகம், மகா அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பின்னர் திருக்கல்யாண உற்சவம், பஞ்ச மூர்த்திகள் திருவீதி உலா நடைபெற்றது.