திருப்பதி,
திருப்பதி கோதண்டராமர் கோவிலில் மார்ச் 17-ந்தேதியில் இருந்து 25-ந்தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடக்கிறது. பிரம்மோற்சவத்திற்கான அங்குரார்ப்பண வைபவம், மார்ச் 16 அன்று மாலை 7 மணி முதல் 8.30 மணி வரை நடைபெறும். இதையொட்டி, சேனாதிபதி உற்சவம், மேதினி பூஜை மற்றும் ம்ருத்ஸங்கிரஹணம் ஆகியவை நடைபெறும்.
பிரம்மோற்சவத்திற்கு முன்னதாக ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடைபெறுவது வழக்கம். அவ்வகையில் இன்று காலையில் கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் பாரம்பரிய முறைப்படி நடைபெற்றது.
இதையொட்டி, இன்று அதிகாலையில் 'சுப்ரபாதம்' இசைக்கப்பட்டு பகவானை துயிலெப்பி, 'தோமாலை சேவை' மற்றும் 'சஹஸ்ரநாம அர்ச்சனை' ஆகியவை நடைபெற்றன. காலை 6.30 மணி முதல் 9.00 மணி வரை 'கோவில் ஆழ்வார் திருமஞ்சனம்' நடத்தப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக, கோவில் வளாகம் முழுமையாகச் சுத்தம் செய்யப்பட்டது. பின்னர் மஞ்சள், குங்குமம், சந்தனம், கற்பூரம், கிச்சிலி வேர், கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்ட நறுமணக் கலவை, கருவறையின் சுவர்களில் தெளிக்கப்பட்டது. ஆழ்வார் திருமஞ்சன நிகழ்ச்சி நிறைவடைந்த பிறகு, பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டனர்.
ஐதராபாத்தைச் சேர்ந்த பக்தை பிரசன்னா ரெட்டி நான்கு திரைச்சீலைகளையும், திருப்பதியைச் சேர்ந்த மணி இரண்டு திரைச்சீலைகளையும் கோவிலுக்கு நன்கொடையாக வழங்கினர்.
இந்நிகழ்வில் கோவிலின் துணை நிர்வாக அதிகாரி நாகரத்னா, தலைமை அர்ச்சகர் ஏ.பி. ஆனந்த் குமார், கோவில் ஆய்வாளர் சுரேஷ் மற்றும் பிற அதிகாரிகள் உடனிருந்தனர்.