கம்பத்திற்கு பூஜை செய்து வழிபடும் பக்தர்கள் 
ஆன்மிகம்

நன்செய் இடையாறு மகா மாரியம்மன் கோவில் திருவிழா: கம்பத்திற்கு புனித நீர் ஊற்றி வழிபாடு

தீமிதி நிகழ்வில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தீமிதித்து வழிபடுவார்கள்.

பரமத்திவேலூர்,

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அருகே நன்செய் இடையாறில் பிரசித்தி பெற்ற மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் தீ மிதி திருவிழா ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டின் திருவிழா நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு கம்பம் நடும் விழாவுடன் தொடங்கியது.

இன்று காலை பக்தர்கள் காவிரியில் நீராடி கோவில் முன்பு நடப்பட்டுள்ள கம்பத்திற்கு பால் மற்றும் தீர்த்தங்கள் ஊற்றி வழிபட்டனர். மாரியம்மனுக்கும் பால் மற்றும் தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து, மஞ்சள் கயிறு அணிந்து விரதம் தொடங்கினர்.

நாளை தொடங்கி 21-ஆம் தேதிவரை தொடர்ந்து மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் , சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெறுகிறது. 22-ஆம் தேதி மாலை வடிசோறு நிகழ்ச்சியும், அக்னிசட்டி எடுத்து வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

23-ஆம் தேதி மதியம் பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி ஊர்வலமாக கோவிலுக்கு வந்து கோவில் முன்பு அமைக்கப்படும் பிரமாண்ட குண்டத்தில் இறங்கி தீமிதித்து வழிபடுவார்கள். தமிழகத்திலேயே மிக நீளமானது என கூறப்படும் இந்த குண்டம், 62 அடி நீளமும், 6 அடி அகலமும் கொண்டதாக இருக்கும். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீமிதித்தும், பூ வாரிப்போட்டும் நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.

24- ஆம் தேதி கிடா வெட்டும் நிகழ்ச்சி மற்றும் பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறும். குழந்தை பாக்கியம் கிடைக்க அம்மனிடம் வேண்டிக்கொண்டவர்கள், குழந்தை பிறந்த பின்பு கரும்பில் தொட்டில் கட்டி கோவிலை சுற்றி வந்து நேர்த்திக்கடனை செலுத்தும் நிகழ்ச்சியும் நடைபெறும்.

25-ஆம் தேதி அதிகாலை கம்பம் ஆற்றுக்கு செல்லும் நிகழ்ச்சியும், மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை நன்செய் இடையாறு மகா மாரியம்மன் கோவில் எட்டுப்பட்டி அறங்காவலர் குழுவினர், விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

Also read:சமயபுரம் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா தொடங்கியது