பெருஞ்சேரி வாகீஸ்வரர் கோவிலில் சப்பர வீதி உலா 
ஆன்மிகம்

பெருஞ்சேரி வாகீஸ்வரர் கோவிலில் மாசி திருவிழா.. சப்பர வீதி உலா

மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட இரண்டு சப்பரங்களில் சுவாமி ரிஷப வாகனத்திலும், அம்பாள் அன்னபட்சி வாகனத்திலும் எழுந்தருளினர்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா பெருஞ்சேரி கிராமத்தில் 1500 ஆண்டுகள் பழைமையான ஸ்ரீ சுவாதந்திர நாயகி சமேத ஸ்ரீ வாகீஸ்வரர் கோவில் உள்ளது.

மயிலாடுதுறையில் மயூரநாதரை வியாழன் வழிபட்டு தேவர்களுக்கெல்லாம் குருவாகும் வரம் கேட்டதாகவும், அவரை பெருஞ்சேரி கிராமம் சென்று ஈசனை பிரதிஷ்டை செய்து வணங்கினால் அருள் கிடைக்கும் என்று மயூரநாதர் அருளியதால், பெருஞ்சேரியில் வியாழன் சுவாதந்திர நாயகி உடனாகிய வாகீஸ்வரரை பிரதிஷ்டை செய்து வழிபட்டதாகவும் ஐதீகம். இதனால் இக்கோவில் குரு பரிகார தலமாக விளங்குகிறது.

பல்வேறு சிறப்புகளை உடைய இக்கோவிலில் மாசி மக பெருந்திருவிழா கடந்த 40 ஆண்டுகளாக நடைபெறாமல் தடைபட்டிருந்தது. இக்கோவிலின் கும்பாபிஷேகம் இந்த ஆண்டு நடைபெற்ற நிலையில், மாசி மக பெருந்திருவிழாவை மீண்டும் நடத்த கிராம மக்கள் முடிவு செய்தனர். அதன்படி கடந்த சனிக்கிழமை ரிஷப கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.

5-ஆம் திருநாளான நேற்று சப்பர வீதி உலா நடைபெற்றது. மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட இரண்டு சப்பரங்களில் சுவாமி ரிஷப வாகனத்திலும், அம்பாள் அன்னபட்சி வாகனத்திலும் நேரெதிராக எழுந்தருள செய்யப்பட்டனர். மேலும், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் சுவாமிகளும் எழுந்தருள செய்யப்பட்டு பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

மாசி மக பெருந்திருவிழாவில், நாளை (வெள்ளிக்கிழமை) திருக்கல்யாணமும், ஞாயிற்றுக்கிழமை திருத்தேர் உற்சவமும், திங்கள்கிழமை மாசி மக தீர்த்தவாரி உற்சவமும் நடைபெற உள்ளது.

SCROLL FOR NEXT