சனிப்பெயர்ச்சி பலன்கள் 2026: சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம்

சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் ஆகிய ராசிக்காரர்களுக்கான சனிப்பெயர்ச்சி பலன்களை பார்ப்போம்.
சனிப்பெயர்ச்சி பலன்கள் 2026
சனிப்பெயர்ச்சி பலன்கள் 2026
Published on

சிம்மம்

சிம்ம ராசி நேயர்களுக்கு இந்தச் சனிப்பெயர்ச்சி ஒரு சவாலான காலகட்டமாக அமைகிறது. உங்கள் ராசிக்கு 6 மற்றும் 7-ம் இடங்களுக்கு அதிபதியான சனி பகவான், இப்போது 8-ம் இடமான அஷ்டம ஸ்தானத்திற்கு வருகிறார். இந்த ‘அஷ்டமச் சனி’ காலம் என்பது ஜோதிட ரீதியாக ஒரு போராட்டமான காலம் ஆகும். அதே சமயம், சுப கிரகமான குருவின் வீட்டில் சனி இருப்பதால் ‘கர்ம பலன் நிவர்த்தி’ காலமாகவும் இது அமையும்.

ராசிக்கு அஷ்டம ஸ்தானத்தில் உள்ள சனி உங்கள் ஆரோக்கியம், வண்டி வாகனப் பயணம் மற்றும் நீண்ட காலத் திட்டங்களில் சில தடைகளை ஏற்படுத்தலாம். தேவையற்ற வாக்குவாதங்கள் மற்றும் சட்ட விவகாரங்களில் இருந்து தள்ளி இருப்பது நல்லது. இருப்பினும், 11-ம் இடத்தில் இருக்கும் குருவின் பார்வை உங்களுக்கு பொருளாதாரப் பாதுகாப்பை வழங்கும்.

குடும்பம், பொருளாதாரம்

குடும்பத்தில் அமைதி காக்க நீங்கள் விட்டுக்கொடுத்துச் செல்வது அவசியம். வாழ்க்கைத் துணையுடன் சில கருத்து வேறுபாடுகள் வரலாம். பேச்சில் நிதானம் தேவை. பொருளாதாரத்தைப் பொறுத்தவரை, வருமானத்தை விடச் செலவுகள் அதிகம் ஏற்படும். அதனால் சிக்கனம் அவசியம்.

தொழிலில் புதிய முதலீடுகளைத் தவிர்க்கவும். வரி விவகாரங்கள் மற்றும் சட்டப்பூர்வ ஒப்பந்தங்களில் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். தேவையற்ற வெளியூர் பயணங்களைக் குறைத்துக் கொண்டு குடும்பத்துடன் அதிக நேரத்தைச் செலவிடுவது நல்லது. கடன்களைக் கட்டுப்படுத்த வரவுக்குள் செலவு செய்யும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

தொழில், உத்தியோகம்

தொழில் மற்றும் உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். வேலையில் திடீர் மாற்றங்கள் அல்லது மேலதிகாரிகளுடன் மனஸ்தாபங்கள் ஏற்படும். வேலையை மாற்றும் முடிவை, விடும் முடிவை கண்டிப்பாக தள்ளி வைப்பது நல்லது. சுயதொழில் செய்பவர்கள் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

புதிய கூட்டாளிகளைத் தேர்ந்தெடுக்கும் போது மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எதிலும் லாபம் அடைவதை விட, இருப்பதை இழக்காமல் இருப்பதே இந்த இரண்டரை ஆண்டுகாலத்தின் வெற்றியாகும். பணி புரியும் இடத்தில் உங்களது பொறுமையைச் சோதிக்கும் நிகழ்வுகள் நடக்கும்.

கலை, கல்வி

கல்வியில் மாணவர்களும், கலைஞர்கள் கலைத்துறையிலும் அதிக கவனத்தைச் செலுத்த வேண்டும். மாணவர்களின் படிப்பில் மந்தநிலை ஏற்படாமல் இருக்கத் திட்டமிட்ட படிப்பு அவசியம். கலைத்துறையினருக்குப் போராட்டத்திற்குப் பிறகே நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

உங்களின் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். இருப்பினும், தொடர் முயற்சி உங்களை வெற்றிப் பாதையில் நடத்திச் செல்லும். ஆன்மீகத் தேடல் இருப்பவர்களுக்கு இது ஞான அனுபவத்தைத் தரும் காலகட்டமாகும். புதிய கலைகளைக் கற்பதில் ஆர்வம் காட்டினால் மன அழுத்தம் குறையும். நம்பிக்கை பிறக்கும்.

சனி ப்ரீதி - பரிகாரம்

சிம்ம ராசியினர் தினசரி அதிகாலையில் எழுவதும், சூரிய தரிசனம், கருட தரிசனம் செய்வதும் மிகவும் அவசியம். சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றி, கருடாழ்வாருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுவது அஷ்டமச் சனியின் பாதிப்பைக் குறைக்கும்.

வண்டி வாகனங்களை இயக்கும் போது அதீத வேகத்தை தவிர்ப்பதும், முடிந்தவரை இரவு நேரப் பயணங்களைத் தவிர்ப்பதும் முக்கியம். ஏழைகளுக்குப் போர்வை அல்லது கருப்பு ஆடைகளைத் தானம் செய்வது நல்ல சனிப்ரீதியாக அமையும். ஞாயிற்றுக்கிழமை மாலை நேரங்களில் சிவன் கோவிலுக்குச் சென்று நித்திய பிரதோஷ காலத்தில் (தினசரி மாலை) வழிபடுவது சிறந்தது.

கன்னி

கன்னி ராசி நேயர்களுக்கு இந்தச் சனிப்பெயர்ச்சி மிதமான பலன்களை வழங்கும். உங்கள் ராசிக்கு 5 மற்றும் 6-ம் இடங்களுக்கு அதிபதியான சனி பகவான், இப்போது 7-ம் இடமான களத்திர ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். ஜோதிட ரீதியாக இது ‘கண்டகச் சனி’ என்று அழைக்கப்பட்டாலும், மீன ராசி சுபரான குருவின் வீடு என்பதால் பெரிய பாதிப்புகள் இருக்காது.

சனியின் பார்வை 9, 1, 4 ஆகிய இடங்களில் விழுவதால், உங்கள் ஆரோக்கியம் மற்றும் தாயாரின் உடல்நிலையில் அக்கறை காட்டவும். நீண்ட நாட்களாக இருந்த திருமணத் தடைகள் இப்போது விலகும். கணவன்-மனைவி இடையே இதுவரை இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை பலப்படும்.

குடும்பம், பொருளாதாரம்

குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி திரும்பும். பிரிந்திருந்த தம்பதிகள் ஒன்று சேர்வர். பொருளாதார ரீதியாக, வருமானம் திருப்திகரமாக இருக்கும். புதிய சொத்துக்கள், வாகனங்கள் வாங்குவதற்கான யோகம் உண்டு. இருப்பினும், வீண் ஆடம்பரச் செலவுகளைத் திட்டமிட்டு தவிர்ப்பது எதிர்காலத்திற்கு நல்லது.

குடும்பப் பெரியவர்களின் ஆலோசனைகள் உங்களுக்கு இக்கட்டான நேரங்களில் வழிகாட்டும். சுப காரியங்களுக்காகக் கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படும். ஆனால், அது உங்களால் திருப்பிச் செலுத்தக்கூடிய அளவிலேயே இருக்கும். குழந்தைகள் வழியில் கவலைகள் ஏற்பட்டு நீங்கும்.

தொழில், உத்தியோகம்

தொழில் மற்றும் உத்தியோகத்தைப் பொறுத்தவரை, புதிய தொழில் வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். உத்தியோகத்தில் பதவி உயர்வும், புதிய பொறுப்புகளும் கிடைக்கும். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு இக்காலம் மிகவும் சாதகமானது. கூட்டாளிகளுடனான புரிந்துணர்வு அதிகரிக்கும். வேலைப்பளு அதிகரிக்கும்.

புதிய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயரும். வேலை நிமித்தமாக அடிக்கடி வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டும். அவை உங்களுக்கு அனுகூலத்தைத் தரும். வியாபாரத்தில் புதிய யுக்திகளை சரியாக திட்டமிட்டு கையாள்வதன் மூலம் எதிர்ப்புகளை முறியடிக்கலாம்.

கலை, கல்வி

கல்வியில் மாணவர்கள் சிறப்பான முன்னேற்றம் காண்பார்கள். குறிப்பாகப் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். கலைத்துறையினருக்குப் புகழும் கௌரவமும் கூடும். புதிய வாய்ப்புகள் மூலம் உங்கள் கலைத் திறனை நிரூபிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

பொதுவாழ்வில் இருப்பவர்களுக்குப் புதிய பொறுப்புகள் மற்றும் பதவிகள் கிடைக்கும். எழுத்துத் துறையில் இருப்பவர்களுக்கு இக்காலம் புகழையும் வருமானத்தையும் தேடித்தரும். உங்களுடைய கடந்த கால படைப்புகள் இப்பொழுது வெளிச்சத்திற்கு வரும்.

சனிப்ரீதி - பரிகாரம்

கன்னி ராசியினர் மகாலட்சுமி, அம்பிகை வழிபாடு செய்வது பொருளாதார மேன்மைக்கு வழிவகுக்கும். சனிக்கிழமைகளில் எள் சாதம் தயாரித்து காகத்திற்கு வைப்பது, கோவிலில் புளி சாதம் விநியோகம் செய்வது ஆகியவை உங்கள் கர்ம வினைகளைக் குறைக்கும்.

நண்பர்கள், வாழ்க்கைத் துணையின் கருத்துக்களுக்கு மதிப்பு அளிப்பதும், அவர்களைப் புரிந்து கொண்டு செயல்படுவதும் கண்டகச் சனியின் தாக்கத்தைக் குறைக்கும். சனிக்கிழமைகளில் அம்பிகை சன்னதியில் நீல நிற மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடுவது நலம் தரும். பசுக்களுக்குப் பழங்களை, வெண் பூசணியை உணவாக வழங்குவது புண்ணியம் சேர்க்கும்.

துலாம்

துலாம் ராசி நேயர்களுக்கு இந்தச் சனிப்பெயர்ச்சி ஒரு பொற்காலத்தின் தொடக்கமாகும். உங்கள் ராசிக்கு யோக கிரகமான சனி பகவான், இப்போது 6-ம் இடமான ருண, ரோக, சத்ரு ஸ்தானத்திற்கு, உபஜய ஸ்தானத்திற்கு வருகிறார். இது ‘ருண விமோசன சனி’ என்று ஜோதிட ரீதியாக குறிப்பிடப்படும். அதாவது கடன், நோய் ஆகியவை தீரும் என அர்த்தம்.

6-ம் இடத்தில் சனி அமரும் போது உங்கள் எதிரிகள் உங்களுக்குப் பணியும் நிலை ஏற்படும். நீண்ட நாட்களாக உங்களை வாட்டி வதைத்த கடன் பிரச்சினைகளில் இருந்து முழுமையாக விடுதலை கிடைக்கும். ஆரோக்கியத்தில் நிலவி வந்த மந்தநிலை மாறி, உடல் தெம்பு அதிகரிக்கும். வழக்கு விவகாரங்களில் உங்களுக்குச் சாதகமான தீர்ப்பு வரும். உங்கள் தைரியமும் வீரமும் இந்த காலகட்டத்தில் பலமடங்கு உயரும்.

குடும்பம், பொருளாதாரம்

குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் குடிகொள்ளும். உறவினர்களிடையே நிலவி வந்த கசப்பு உணர்வுகள் மாறும். பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். எதிர்பாராத பணவரவு அல்லது பழைய சொத்துக்கள் விற்பனை மூலம் கணிசமான தொகை கைக்கு வந்து சேரும்.

குழந்தைகளால் மகிழ்ச்சியும், அவர்களின் முன்னேற்றத்தால் பெருமையும் உண்டாகும். புதிய வீடு கட்டும் யோகம் அல்லது வீட்டைப் புதுப்பிக்கும் யோகம் துலாம் ராசியினருக்கு வலுவாக உள்ளது. இளைய சகோதரர்களுடனான உறவு பலப்படும். ஒரு சிலர் சொந்த வீடு கட்டுவதற்கும் காலம் கனிந்து உள்ளது.

தொழில், உத்தியோகம்

தொழில் மற்றும் பணியிடத்தில் உங்கள் ஆதிக்கம் அதிகரிக்கும். பணியிடத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு இருக்கும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு ஆகியவை தடையின்றி கிடைக்கும். தொழிலில் புதிய யுக்திகளைக் கையாண்டு பெரும் லாபம் ஈட்டுவீர்கள்.

போட்டியாளர்களை முறியடித்து முன்னேறுவீர்கள். வேலையில்லாதவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் கூடிய புதிய வேலை அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளின் பாராட்டுக்களால் உற்சாகமடைவார்கள். வெளிநாட்டுத் தொடர்புகள் மூலம் தொழில் லாபம் பெருகும்.

கலை, கல்வி

கல்வி மற்றும் கலைத்துறையில் மாணவர்கள் முதலிடம் பிடிப்பார்கள். குறிப்பாக விளையாட்டுத் துறையில் இருப்பவர்களுக்குப் பதக்கங்கள் மற்றும் விருதுகள் கிடைக்கும். கலைத்துறையினருக்குப் பொற்காலம் என்று சொல்லலாம். மிகச்சிறந்த வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.

நீங்களே எதிர்பார்க்காத வகையில் உங்களின் படைப்பாற்றல் வெகுவாகப் பாராட்டப்படும். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு மக்களின் ஆதரவு பெருகும். சினிமா, இசை போன்ற கலைத்துறையில் இருப்பவர்களுக்குப் புதிய உச்சங்களைத் தொடும் வாய்ப்பு அமையும்.

சனிப்ரீதி - பரிகாரம்

துலாம் ராசியினர் சனிக்கிழமைகளில் கால பைரவரை வழிபாடு செய்வது மிகச்சிறந்த பலனைத் தரும். பைரவருக்கு இலுப்பை எண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது கடன் மற்றும் நோய்களில் இருந்து உங்களைப் பாதுகாக்கும். கருப்பு நாய்களுக்கு இரவில் உணவிடுவது நல்லது.

வாழ்வியல் ரீதியாக, மற்றவர்களைத் துச்சமாக நினைக்காமல் பணிவுடன் நடந்து கொள்வது சனியின் அருளை நிலைக்கச் செய்யும். சனிக்கிழமைகளில் கருப்பு உளுந்து தானம் செய்வதும், அன்னதானம் வழங்குவதும் சிறப்பான பலன்களைக் கொடுக்கும். தினசரி வீட்டில் மங்கல இசையை ஒலிக்கச் செய்வதால் நன்மைகள் பல உண்டாகும்.

விருச்சிகம்

விருச்சிக ராசி நேயர்களுக்கு இந்தச் சனிப்பெயர்ச்சி ஒரு நிம்மதியான சூழலை உருவாக்குகிறது. கடந்த காலங்களில் நீங்கள் அனுபவித்த ‘அர்த்தாஷ்டமச் சனி’ இப்போது முடிவடைகிறது. உங்கள் ராசிக்கு 3 மற்றும் 4-ம் இடங்களுக்கு அதிபதியான சனி பகவான், இப்போது 5-ம் இடமான புத்திர, பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு மாறுவது சாதகமே.

இது பஞ்சமச் சனி என்று அழைக்கப்பட்டாலும், அர்த்தாஷ்டமச் சனியின் கொடுமைகளில் இருந்து இது பெரும் விடுதலையாகும். இதுவரை உங்களை வாட்டி வதைத்த மன உளைச்சல், குழப்பங்கள் மற்றும் குடும்பத்தில் இருந்த சண்டை சச்சரவுகள் நீங்கி மன நிம்மதி கிடைக்கும். பூர்வீகச் சொத்து தொடர்பான பிரச்சனைகளில் உங்களுக்குச் சாதகமாக முடிவுகள் வரும்.

குடும்பம், பொருளாதாரம்

குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலவும். குழந்தை பாக்கியத்துக்காக காத்திருந்தவர்களுக்கு இப்போது புத்திர பாக்கியம் கைகூடும். குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்காலம் குறித்த கவலைகள் நீங்கும். பொருளாதார ரீதியாக, நல்ல வருமான முன்னேற்றம் இருக்கும். சேமிப்பு உயரும்.

இருப்பினும், 5-ம் இடத்தில் சனி இருப்பதால் பங்குச்சந்தை மற்றும் சூதாட்டம் போன்ற ரிஸ்க் நிறைந்த முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் மறைந்து உறவு பலப்படும். குலதெய்வ வழிபாடு மூலம் நற்பலன்களைப் பெறலாம்.

தொழில், உத்தியோகம்

தொழில் மற்றும் உத்தியோகத்தில் உங்களின் உழைப்பிற்கேற்ற பலன்கள் கிடைக்கும். வேலையில் இருந்த முட்டுக்கட்டைகள் நீங்கும். பதவி உயர்வுக்காகக் காத்திருந்தவர்களுக்கு நல்ல செய்தி வரும். தொழிலில் சீரான வளர்ச்சி இருக்கும்.

புதிய தொழில் தொடங்குவதை விட ஏற்கனவே இருக்கும் தொழிலைச் சீரமைப்பதில் கவனம் செலுத்தினால் நல்ல லாபம் ஈட்டலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களிடம் நல்ல பெயர் கிடைக்கும் விதத்தில் நடந்து கொள்வது முக்கியம்.

Also Read
சனிப்பெயர்ச்சி பலன்கள் 2026... பொருளாதாரத்தில் புதிய மாற்றங்கள் உருவாகும்
சனிப்பெயர்ச்சி பலன்கள் 2026

கலை, கல்வி

மாணவர்கள் கல்வியில் சிறந்த கவனம் செலுத்துவார்கள். கடினமான பாடங்களைக்கூட எளிதாகப் புரிந்து கொள்ளும் திறன் இப்போது வளரும். கலைத்துறையில் இருப்பவர்களுக்குப் புதிய வாய்ப்புகள் வரும். உங்களின் தனித்தன்மை வெளிப்படும்.

கலைஞர்களுக்குப் பொருளாதார ரீதியாக முன்னேற்றகரமான காலம் இது. கலைத்துறை மாணவர்கள் மேல் படிப்பிற்காக வெளிநாடு செல்லும் யோகமும் உண்டு. புதிய ஆராய்ச்சிகளில் ஈடுபடும் மாணவர்களுக்குக் கண்டுபிடிப்புகளுக்கான அங்கீகாரம் கிடைக்கும்.

சனிப்ரீதி - பரிகாரம்

விருச்சிக ராசியினர் சனிக்கிழமைகளில் குலதெய்வ வழிபாடு செய்வது விசேஷமாகும். சனிக்கிழமைகளில் சிவபெருமானுக்குப் பால் அபிஷேகம் செய்வதும், நந்தியை வழிபடுவதும் நலம் தரும். நேர்மையான வழியில் பொருளீட்டுவதும், வாக்கு தவறாமல் நடப்பதும் சனியின் அருளைப் பெற்றுத் தரும்.

ஏழைக் குழந்தைகளுக்குக் கல்வி உதவி செய்வது, ஆதரவற்றவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வது உங்கள் பூர்வ புண்ணிய பலனை அதிகரிக்கும். சனிக்கிழமை தோறும் காலை நேரங்களில் விநாயகருக்குச் சிதறு தேங்காய் போடுவது தடைகளை நீக்கும்.

கணித்தவர்: சிவகிரி ஜானகிராமன்

Also Read
சனிப்பெயர்ச்சி பலன்கள் 2026: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்
சனிப்பெயர்ச்சி பலன்கள் 2026

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com