மேல்மலையனூரில் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள். 
ஆன்மிகம்

மாசிப் பெருவிழா.. மேல்மலையனூரில் பயபக்தியுடன் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

தீமிதி நிகழ்வை முன்னிட்டு அங்காளம்மன் சிம்ம வாகனத்தில் ஊர்வலமாக வந்து கோவிலுக்கு முன்பு இருந்த அக்னி குண்டத்தின் முன்பாக எழுந்தருளினார்.

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் உள்ள பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மாசிப் பெருவிழா கடந்த 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் அம்மன் வீதி உலா நடைபெற்றது.

5-ம் நாள் விழாவான நேற்று தீமிதி திருவிழா நடைபெற்றது. இதை முன்னிட்டு அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து அம்மன் வெள்ளிக்கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

மதியம் 1 மணிக்கு உற்சவ அம்மனை அக்னி குளத்திற்கு ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். அங்கு அம்மன் கையில் வேப்பிலை மற்றும் தீச்சட்டி ஏந்தியவாறு அலங்காரம் செய்யப்பட்டு, சிம்ம வாகனத்தில் அமர்த்தினர்.

பின்பு மேளதாளம் முழங்க ஊர்வலமாக வந்து மாலை 4 மணிக்கு கோவிலுக்கு முன்பு இருந்த அக்னி குண்டத்தின் முன்பாக அம்மன் எழுந்தருளினார்.

பின்பு தலைமை பூசாரி அம்மனுக்கும், பூக்குழிக்கும் தீபாராதனை காட்டி பூ உருண்டையை உருட்டி விட்டு முதலில் தீமித்தார். அவரை தொடர்ந்து விரதம் இருந்த பக்தர்கள் அங்காளம்மனை போற்றி பக்தி கோஷம் எழுப்பியவாறு தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மேலும் பக்தர்கள் முதுகில் அலகு குத்தி வேன், லாரி ஆகியவற்றை இழுத்தும், அதன் மீது தொங்கியவாறும், பறவைக் காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு அன்ன வாகனத்தில் அம்மன் வீதி உலா நடைபெற்றது.

6-ம் நாள் விழாவான இன்று (வெள்ளிக்கிழமை) காலையில் தங்கநிற மரப்பல்லக்கிலும், இரவு வெள்ளை யானை வாகனத்திலும் அம்மன் வீதி உலா நடக்கிறது.

Also read:அங்காளம்மன் தீர்த்தமாடிய மேல்மலையனூர் அக்னி குளம்