அமாவாசை யாகம் 
ஆன்மிகம்

ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் பங்குனி மாத அமாவாசை யாகம்

யாக பூஜையை ஆதி பரஞ்சோதி சகலோக சபை நிர்வாகி திருவேங்கட ஜோதி பட்டாச்சாரியார் தலைமை தாங்கி நடத்தி வைத்தார்

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான் பாறையில் ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடம் உள்ளது. இங்கு உலக மக்களின் நலன் வேண்டி பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டு மகா பிரத்யங்கிரா தேவி யாகபூஜை நடைபெற்றது.

யாகத்தை முன்னிட்டு பிரத்யங்கிரா தேவி அம்மன், நரசிங்க பெருமாளுக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. அதன்பின் யாகம் தொடங்கியது. யாக குண்டத்தில் மிளகாய் வற்றல் கொட்டப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க யாக வேள்வி பூஜை நடத்தப்பட்டது. யாக பூஜையை ஆதி பரஞ்சோதி சகலோக சபை நிர்வாகி திருவேங்கட ஜோதி பட்டாச்சாரியார் தலைமை தாங்கி நடத்தி வைத்தார்.

யாக பூஜையில் திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, சேலம், கோவை, திருப்பூர், கமுதி, உடுமலைப்பேட்டை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

இந்த பூஜையினால் வியாபார வளர்ச்சி, செல்வம் சேர்க்கை, குடும்ப அமைதி, திருமணம் கைகூடும், குழந்தை பாக்கியம் கிடைக்கும், முன்னோர்கள் வழி பாவம் தீரும் என தெரிவிக்கப்பட்டது.

பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை காகிதத்தில் எழுதி அதனை அக்னி குண்டத்தில் போட்டு வேண்டிக்கொண்டனர். வெளிநாட்டு பக்தர்கள் இணையதளம் வழியாக பூஜையில் பங்கேற்றனர்.