கன்னியாகுமரி வெங்கடாஜலபதி கோவில் 
ஆன்மிகம்

கன்னியாகுமரி வெங்கடாஜலபதி கோவிலில் நாளை தெலுங்கு வருடப்பிறப்பு விழா

தெலுங்கு வருடப்பிறப்பை முன்னிட்டு வெங்கடாஜலபதிக்கு விசேஷ பூஜைகள், அலங்கார தீபாராதனை நடைபெறுகின்றன.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி விவேகானந்தபுரம் கடற்கரையில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் வெங்கடாஜலபதி கோவில் அமைந்து உள்ளது. இந்த கோவிலில் தெலுங்கு வருடப் பிறப்பு விழா நாளை (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது

இதையொட்டி நாளை காலை 6 மணிக்கு சுப்ரபாத சேவையும் அதைத்தொடர்ந்து வெங்கடாஜலபதிக்கு பூலங்கி சேவை, சிறப்பு வழிபாடு, விசேஷ பூஜைகள், அலங்கார தீபாராதனை போன்றவை நடைபெறுகின்றன.

அதன்பின்னர் காலை 8.30 மணி முதல் 9.30 மணி வரை அர்ச்சகர்கள் பஞ்சாங்கம் வாசிக்கின்றனர். அதன் பிறகு சுவாமிக்கு படைப்பதற்கான பூஜை பொருட்களை கோவில் அர்ச்சகர்கள் மற்றும் நிர்வாகிகள் தலையில் சுமந்து கொண்டு மேளதாளம் முழங்க கோவிலின் வெளி பிரகாரத்தை சுற்றி ஊர்வலமாக எடுத்துச் செல்கின்றனர்.

அந்த பூஜை பொருட்களை வெங்கடாஜலபதி முன்பு படைத்து சிறப்பு வழிபாடு நடக்கிறது. கோவிலில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி, கருட பகவான், பத்மாவதி தாயார், ஆண்டாள் ஆகியோருக்கு சிறப்பு வழிபாடுகள் மற்றும் விசேஷ பூஜை நடக்கிறது. அதன் பின்னர் மதியம் 12 மணிக்கு சிறப்பு அன்னதானம் நடக்கிறது.

மாலை 5.30 மணிக்கு தோமாலை சேவையும், மாலை 6 மணிக்கு அன்னதானமும், இரவு 8 மணிக்கு ஏகாந்த சேவையும், சுவாமி பள்ளியறை எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி திருமலை திருப்பதி தேவஸ்தான வெங்கடாஜலபதி கோவில் ஆய்வாளர் ராமையா, கோவில் நிர்வாகி லட்சுமிபதி மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.

Also read:சென்னை காலடிப்பேட்டை பெருமாள் கோவிலில் ராமநவமி உற்சவம்.. 19-ம் தேதி ஆரம்பம்