ஆன்மிகம்

அரசனின் மனத்துயரத்திற்கு மருந்திட்ட துறவி

நாடே தனக்கு சொந்தமாக இருந்தும், மனதில் கொஞ்சம்கூட அமைதி இல்லை என்று கூறிய மன்னனுக்கு துறவி சரியான வழிகாட்டுதலை வழங்கினார்.

ஒரு நாட்டில் ஆட்சி அந்த செய்து வந்த அரசனின் ஆட்சிமுறை அனைத்து தரப்பினராலும் பாராட்டும்படி இருந்தது. அவனது ஆட்சியில் மக்கள் மீது வரிச்சுமை திணிக்கப்படவில்லை. வறுமையும் இல்லை. கள்வர் பயமும் மக்களிடத்தில் இல்லை. விவசாயமும், கலைகளும் வளர்ந்தன. அறிஞர் பெருமக்கள் கௌரவிக்கப்பட்டனர். மக்களின் மனதில் ஆனந்தம் தாண்டவம் ஆடியது.

ஆனால் இதற்கெல்லாம் காரணமாக இருந்த அரசனின் மனமோ நிம்மதியின்றி தவித்துக்கொண்டிருந்தது. நாளுக்கு நாள் அவனது மனச்சுமை கூடியதே தவிர, குறைந்தபாடில்லை. இறுதியில் தன் மனக்கவலையை போக்க ஒரு ஊரில் வசித்து வந்த துறவியை நாடிச்சென்றான். அரசனை கண்டதும், துறவி அன்புடன் வரவேற்றார். அவனிடம் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அரசனின் மனம் அமைதியின்றி தவிப்பதை புரிந்துகொண்டார். அவனிடமே அதற்கான காரணத்தை விசாரித்தார்.

"மன்னா! அரச காரியங்கள் அனைத்தும் முறையாக, சரியாக நடக்கின்றனவா? என்று கேட்டார்.

எந்த குறையுமில்லை. எல்லாம் சரியாக நடக்கிறது சுவாமி என்றான் அரசன்.

"மக்கள் எந்த குறையும் இன்றி, துன்பமும் இன்றி வாழ்கிறார்களா? என்று கேட்டார் துறவி.

"மக்களின் மகிழ்ச்சிக்கு அளவில்லை என்று பதிலளித்தான் அரசன்.

"அப்படியானால் உனக்கு என்னதான் கவலை? என்று திரும்ப கேட்டார் துறவி.

மன்னனோ, நாடே எனக்கு சொந்தமாக இருந்தும், என் மனதில் கொஞ்சம் கூட அமைதி இல்லை என்று சொன்னான்.

அப்படியா! நீ ஒன்று செய். உன்னுடைய நாட்டை எனக்கு கொடுத்துவிடு என்றார் துறவி.

இப்படியொரு வார்த்தையை துறவியிடம் இருந்து மன்னன் எதிர்பார்க்கவில்லை. திகைப்படைந்தான். ஆனால் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல், சரி சுவாமி. அப்படியே ஆகட்டும்" என்றான்.

மீண்டும் துறவியிடம் இருந்து கேள்வி வந்தது. நீ நாட்டை என்னிடம் கொடுத்து விட்டாய். இனி நீ என்ன செய்வாய்? என்று கேட்டார்.

"கொஞ்சம் பொருளை எடுத்துக் கொண்டு எங்காவது போய் வாழ்வேன் என்றான் அரசன்.

"நாடு எனக்கு சொந்தமாக இருக்கும்போது, கஜானாவில் இருக்கும் பொருளும் எனக்குத்தானே சொந்தம். அதை நீ எப்படி எடுப்பாய்?" என்று கேட்டார் துறவி.

சிறிது நேரம் நேரம் யோசித்த அரசன், தாங்கள் சொல்வது சரிதான். நான் இப்படியே புறப்படுகிறேன். எங்காவது போய் வேலை செய்து பிழைத்துக் கொள்கிறேன் என்றான்.

இப்போதும் துறவி, அந்த வேலையை நீ என்னிடமே செய்யலாமே. என் பிரதிநிதியாக இருந்து, இந்த நாட்டை நீயே கண்காணித்து வா. உன் செலவுக்கு அரண்மனை பொக்கிஷத்தில் இருந்து ஊதியம் பெற்றுக்கொள். எனக்கு வசதிப்படும் நேரத்தில் அங்கு வந்து கணக்குகளை சரிபார்த்துக் கொள்கிறேன் என்றார் துறவி.

மன்னனும் அதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டு, துறவியின் பிரதிநிதியாக இருந்து நாட்டை வழிநடத்தி வந்தான். இரண்டு ஆண்டுகள் முழுமையாக கடந்து போய்விட்டன.

ஒரு நாள் அரண்மனைக்கு வந்தார் துறவி. அவரை பார்த்ததும் ஓடோடி சென்று வரவேற்றான் அரசன். ஆசனத்தில் அமர்ந்த துறவியிடம், "சுவாமி! கொஞ்சம் இருங்கள், நான் போய் கணக்கு வழக்குகளை கொண்டு வருகிறேன் என்றான்.

அரசனை கையமர்த்தி அமரும்படி கூறினார் துறவி. பின்னர் மன்னா! இப்போது உன்னுடைய மனநிலை எப்படி இருக்கிறது? என்று கேட்டார்.

நான் ரொம்பவே மகிழ்ச்சியாக இருக்கிறேன். எந்தவித கவலையும் என்னுடைய மனதில் இப்போது இல்லை என்றான், அரசன்.

"அதற்கான காரணம் என்னவென்று உனக்கு தெரியுமா?" என்று கேட்டார் துறவி.

அதற்கான பதிலை அரசனால் சொல்ல முடியவில்லை.

மீண்டும் துறவி கேட்டார். இதற்கு முன்பு நீ செய்த ஆட்சிக்கும், இந்த இரண்டு வருட கால ஆட்சிக்கும் ஏதாவது மாறுதல் உண்டா?" என்று கேட்டார்.

அதற்கு, இல்லை என்ற பதில் அரசனிடம் இருந்து வந்தது.

அதே அரண்மனை, அதே பரிபாலனம். ஆனால் இப்போது உனக்கு நிம்மதி இருக்கிறது. அப்போது ஏன் இல்லை" என்று கேள்வி எழுப்பினார் துறவி.

அதற்கான பதில் அரசனிடம் இல்லை.

துறவியே கூறினார். இதற்கு முன்பு இது உன்னுடையது என்று நினைத்து நீ ஆட்சி செய்தாய். இப்போது இது வேறு ஒருவருடையது, அவருடைய பிரதிநிதியாக இருப்பதாக கருதிக்கொள்கிறாய். இது உன்னுடையது என்று எண்ணியவரை, உன்னுடைய மனம் அமைதி இன்றி இருந்தது. உன்னுடையது அல்ல என்ற எண்ணம் வந்ததும் உன் மனத் துயரங்கள் விலகி விட்டன. எந்த பொருளையும் தன்னுடையது என்று கருதும்போது தான் இன்ப, துன்பங்கள் நம்மை தாக்குகின்றன என்றார் துறவி.

அரசன் மனம் தெளிந்தான்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்