விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மாசிப்பெருவிழா கடந்த 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 16-ந்தேதி மயானக்கொள்ளையும், 19-ந்தேதி தீமிதி உற்சவமும் வெகுவிமரிசையாக நடைபெற்றது. மேலும் தினசரி இரவு ஆண் பூதம், பெண் பூதம், சிம்மம், அன்னம், யானை ஆகிய வாகனங்களில் அம்மன் வீதி உலா நடைபெற்றது.
விழாவின் 7-ம் நாளான நேற்று சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது. இதை முன்னிட்டு அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு மூலஸ்தானத்தில் உள்ள அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் பால், தயிர், சந்தனம், மஞ்சள், விபூதி, குங்குமம், பஞ்சாமிர்தம், தேன், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.
தொடர்ந்து உற்சவ அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகாரத்தில் காட்சி அளித்தார். புதிதாக செய்யப்பட்ட தேர் மதியம் 3 மணிக்கு வடக்கு வாசல் முன்பு நிறுத்தப்பட்டது. தேரானது வாழை மரங்கள், தென்னங்குலைகள், பலவண்ண மாலைகள் ஆகியவற்றால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. உற்சவ அம்மன் பம்பை, மேள, தாளம் முழங்க அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து ஊரின் முக்கிய பிரமுகர்கள், அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஏழு வம்சாவழி அறங்காவலர்கள் ஆகியோருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து அம்மனுக்கும், தேருக்கும் தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
மாலை 4.30 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. கூடியிருந்த திரளான பக்தர்கள் பக்தி கோஷத்துடன் வடம் பிடித்து தேர் இழுத்தனர். அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் தங்கள் வயல்களில் விளைந்த தானியங்கள், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றையும், சில்லரை நாணயங்களையும் தேரின் மீது வீசி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மேலும் சித்தாங்கு வேடமணிந்தும், தீச்சட்டி ஏந்தியும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். தேர் பக்தர்கள் வெள்ளத்தில் அசைந்து ஆடியபடி மயானம், கிழக்கு, தெற்கு மேற்கு ஆகிய வாசல்கள் வழியாக வலம் வந்து மீண்டும் நிலையை அடைந்தது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தேரோட்டத்தை முன்னிட்டு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, சேலம், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரியில் இருந்தும் மேல்மலையனூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. தேரோட்டத்தை முன்னிட்டு நேற்று விழுப்புரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
விழாவின் 8-ம் நாளான இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை அம்மன் வெள்ளை யானை வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு குதிரை வாகன வீதி உலா நடைபெறுகிறது.