

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே உள்ள ஒதியத்தூர் கிராமத்தில் பழமைவாய்ந்த அங்காள பரமேஸ்வரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் மாசி மாதம் மயானக்கொள்ளை விழாவில் அங்காளம்மன் தேரில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கும் நிகழ்வு வெகுவிமரிசையாக நடைபெறும்.
அதேபோல் 139-ம் ஆண்டு மயானக்கொள்ளை திருவிழா கடந்த 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, கிராம தேவதைகளுக்கு அபிஷேக ஆராதனையும், அம்மனுக்கு 108 பால்குட அபிஷேகம் நடைபெற்று திருத்தேரில் கலசம் ஏற்றுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. மகா சிவராத்திரியை முன்னிட்டு கோவில் வளாகத்தில் உள்ள அபிராமி உடனுறை சுந்தரேஸ்வரர் சாமிக்கு மகா அபிஷேகமும் நடைபெற்றது.
17-ந்தேதி பகலில் அங்காள பரமேஸ்வரியம்மனுக்கு மயானக்கொள்ளை நிகழ்ச்சி நடந்தது. பின்னர் இரவு தேர் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட தேரில், அங்காள பரமேஸ்வரியம்மன் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் வடம்பிடித்து தேர் இழுத்தனர். இத்தேர் ஒதியத்தூர் கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மறுநாள் கோவிலை வந்தடைந்தது. அதன் பிறகு அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.