கோவில்களில் மூலஸ்தானத்தில் பிரதிஷ்டை செய்யக்கூடிய கற்சிலைகளை, சிற்பி செய்தவுடன் அப்படியே பிரதிஷ்டை செய்துவிட முடியாது. இதற்கு பல்வேறு ஆகம விதிகளை முன்னோர்கள் உருவாக்கி வைத்துள்ளார்கள். அறிவியலும் ஆன்மிகமும் பின்னிப்பிணைந்த வழிமுறைகளின் மூலம் அந்த சிலைகளுக்கு தெய்வீக ஆற்றலை ஏற்படுத்துகிறார்கள்.
புதிதாக சிலைகள் செய்தால் அதை ஒரு நல்ல நாளில் நெல், நவதானியங்கள் அல்லது தண்ணீருக்குள் ஒரு மண்டலம் (48 நாட்கள்) வைத்து அதன்பின்னர் உரிய பூஜைகள் செய்து பிரதிஷ்டை செய்து வழிபடுகிறார்கள். அதன் பின்னணி என்ன என்பதை பார்ப்போம்.
கோவில்களில் பிரதிஷ்டை செய்யக்கூடிய சிலைகளை பெரும்பாலும் கருங்கல்லில் வடிக்கிறார்கள். ஆகம முறை மற்றும் சிற்ப சாஸ்திர முறைப்படி வடிக்கப்பட்ட சிலைகள், பிராண பிரதிஷ்டை மற்றும் தினசரி அபிஷேகங்கள் மூலம் தெய்வீக ஆற்றலைப் பெறுகின்றன.
பூரணமான ஒரு விக்ரகத்தை சிற்பி செதுக்கும்போது, சில சமயம் உளி தவறான இடத்தில் பட்டு லேசாக சேதம் ஏற்படலாம். இதேபோல் சிலசமயம் சிலையின் ஒரு பாகத்தில் சேதம் ஏற்படலாம். இவ்வாறு ஏதோ ஒரு இடத்தில் சிதைந்துவிட்டால், ஒருவித பசையை போட்டு ஒட்டி சரிசெய்யும் வழக்கம் பழங்காலத்தில் இருந்தது. இதை மிக நுட்பமாக செய்வார்கள்.
இதுபோன்ற லேசான குறைபாடு உள்ள சிலைகள் கோவிலின் மற்ற சன்னதிகளுக்கு பிரதிஷ்டை செய்வார்கள். ஆனால் மூலஸ்தானத்தில் பிரதிஷ்டை செய்யக்கூடிய விக்ரகரங்களுக்கு அந்த தோஷம் இருந்து, அதை பிரதிஷ்டை செய்து வழிபட்டால் கெடுதல் வரும் என ஆகம விதி சொல்கிறது.
இவ்வாறு சிலைகளில் ஒட்டப்பட்ட பகுதி, லேசான சேதம் அடைந்த பகுதியை கண்டுபிடிக்கவே 48 நாட்கள் தண்ணீரில் அமிழ்த்தி வைக்கும் வழக்கம் பின்பற்றப்படுகிறது. இவ்வாறு தண்ணீரில் மூழ்கி இருந்தால் சேதம் அடைந்து பசையால் ஒட்டப்பட்ட இடத்தை தவிர மற்ற இடங்களில் பாசி படியும். இதை வைத்து சிலையில் உள்ள தோஷத்தை கண்டறியலாம்.
இதேபோல் நெல் மற்றும் நவதானியத்தில் சிலையை மூழ்க வைத்தும் பரிசோதனை செய்வார்கள். இவ்வாறு செய்யும்போது, நவதானியத்தில் இருந்து வெளியாகும் பல்வேறு விதமான வெப்பமானது சிலையை தாக்கும். 48 நாட்கள் இந்த வெப்பத்தில் இருக்கும்போது, சிலையில் ஏதேனும் கீறல், வலிமையற்ற பகுதி இருந்தால் உடைந்துவிடும்.
இவ்வாறு சிலையில் உள்ள குறைகளை கண்டறிந்து, ஆதர்ஷன சக்தி உள்ள சிலைகளை பிரதிஷ்டை செய்துள்ளார்கள் முன்னோர்கள்.