உங்கள் முகவரி

மழைக்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய வீட்டு பராமரிப்புகள்

குடியிருப்புகள் மற்றும் கட்டுமான பணி நடைபெறும் இடங்கள் ஆகியவற்றில் தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம்.

வெப்ப காலம் முடிந்து, மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் வீடுகள், குடியிருப்புகள் மற்றும் கட்டுமான பணி நடைபெறும் இடங்கள் ஆகியவற்றில் தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம். குறிப்பாக, வீடுகளில் தகுந்த பராமரிப்புகள் செய்யப்படாவிட்டால், மரப்பொருட்கள் உள்ளிட்ட பலவற்றிலும் பூஞ்சை காளான்கள் படர்ந்து பல்வேறு பாதிப்புகளை ஏற்படும்.

வீட்டின் மேற்கூரை ஓடுகளால் அமைக்கப்பட்டிருந்தால், மழைக்காலத்தில் கூரையின் மேற்புறத்தில், தேவைக்கேற்ப பெரிய சைஸ் பிளாஸ்டிக் ஷீட் விரித்து பாதுகாக்கலாம். மேற்கூரை கான்கிரீட் தளமாக இருக்கும் பட்சத்தில் வெதரிங் கோர்ஸ் நிலை பற்றி கவனித்து, தண்ணீர் கசிவுகளை தடுக்க வேண்டும். அதன் மூலம் சுவர்களில் ஏற்படும் ஓதங்கள் தவிர்க்கப்படும்.

கதவுகள் மற்றும் ஜன்னல்கள் மரத்தால் செய்யப்பட்டவையாக இருந்தால் அதன் பராமரிப்புகளை சரியாக செய்யவேண்டும். மழைக்காலங்களில் அவற்றை உலர்ந்த துணி கொண்டு அவ்வப்போது துடைக்கலாம். நாற்காலிகள், டிவி போன்ற பொருட்களை அடிக்கடி துடைப்பதோடு, கார்பெட்டுகளை மழைக்காலத்தில் பயன்படுத்தாமல் சுருட்டி வைப்பதும் சரியான முடிவாக இருக்கும். போம் வகை சோபாக்களை பிளாஸ்டிக் கவர் கொண்டு மூடி வைப்பது, சோபாக்கள் மற்றும் கட்டில் கால்களுக்கு சரியான புஷ்கள் பொருத்துவது ஆகியவை அவசியம்.

பாத்ரூம் கதவுகள் மரத்தால் செய்யப்பட்டதாக இருந்தால், அதன் கீழ்ப்புறம் அலுமினிய தகடு பொருத்திவிட்டால் ஈரப்பதம் அவற்றை பாதிக்காது. மேலும், குளியலறையின் வாசற்படி உயரம் குறைவாக இருந்து, வீட்டின் தரை உயரமாக இருந்தால் தண்ணீர் வெளியே வரக்கூடும். அதை தடுக்க சிறிய அளவில் கிரானைட் அல்லது டைல்ஸ் பதித்து, வாசற்படியை உயரமாக்கலாம்.

மழைக்காலங்களில் மரக்கதவுகள் இறுக்கமாக மாறி எளிதாக திறப்பது அல்லது மூடுவது ஆகியவை சிரமமாக இருக்கும். அதற்கு தகுந்த எண்ணெய் விட்டால் இறுக்கம் தளர்ந்து தாமாக சரியாகிவிடும். அலமாரிகளை ஈரப்பதம் இல்லாமல் துடைத்து, நன்கு உலர்ந்த பிறகு பொருட்களை அதில் அடுக்கலாம். மழை பெய்யும் சமயத்தில் பால்கனி வழியாக வீட்டுக்குள் சாரல் வராமல் இருக்க கெட்டியான பிளாஸ்டிக் ஷீட் ஒன்றை திரைபோல அமைத்துக்கொள்ளலாம்.

தரையடி தண்ணீர் தொட்டிகள் இருக்கும் வீடுகளில் அவற்றின் சுவர்களை உயரப்படுத்த வேண்டும். அதன் மூலம் கழிவு நீர் கலக்காமல் தடுக்க இயலும். கசிவுகள் இருப்பது அறியப்படும்போது, லீக்கேஜ் புரூப் கலந்த ஒயிட் சிமெண்டு மூலம் அந்த இடத்தை அடைத்துவிட வேண்டும். பொதுவாக, மழைக்காலங்களில் கட்டுமான பணிகளை குறிப்பிட்ட நாட்களுக்கு தொடராமல் நிறுத்தி விடுவது வழக்கம். மழைக்காலத்தில் பணிகளை தொடர வேண்டிய அவசியம் இருப்பினும், கான்கிரீட் தளம் அமைப்பதை தவிர்ப்பது அவசியம்.

கட்டுமான பணிகளில் ஈடுபடுபவர்கள் மழை கோட்டுகள் அணிவதாலும், காலுக்கு ரப்பர் ஷூ வகைகளை அணிவதாலும் ஈரம் அல்லது இதர பாதிப்புகளிலிருந்து தப்பிக்கலாம். கட்டுமான பணி நடக்கும் இடங்களில் மழைக்காலங்களில் தரைப்பரப்புகள் வழுக்கக்கூடிய தன்மை கொண்டவையாக இருப்பதால் தகுந்த காலணிகளை பயன்படுத்த வேண்டும். முக்கியமாக உயரமான தளங்களில் பணி புரிபவர்கள் கவனமாக செயல்பட வேண்டியது முக்கியம். ஈரப்பதம் காரணமாக மின்சார பாதிப்புகள் எளிதாக ஏற்படும் என்பதை மனதில் கொள்ளவேண்டும்.

உயரமான கட்டிடங்களில் பணி புரிபவர்கள் இடியும், மின்னலும் ஏற்படும் சமயங்களில் உலோக பொருட்களை கைகளில் வைத்திருப்பது அல்லது உலோக பொருட்கள் மீது நிற்பது ஆகியவற்றை தவிர்ப்பது அவசியம். குறிப்பாக, டவர் கிரேன்களை இயக்குபவர்கள் மழை நின்ற பிறகு பணிகளை தொடர்வதுதான் பாதுகாப்பானது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்