புதுடெல்லி,
டெல்லி நிஜாமுதீனில் தப்லீக் மாநாடு கடந்த மார்ச் மாதத்தில் நடந்தது. இதில் வெளிநாடுகளில் இருந்தும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மத தலைவர்கள் உள்பட முஸ்லீம்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் பங்கேற்றவர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று இருந்ததாகவும், அவர்கள் மூலமாகவே இந்தியாவில் கொரோனா வேகமாக பரவியதாகவும் முதலில் குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்தநிலையில் இந்த மாநாட்டில் வெளிநாடுகளில் இருந்து வந்து பங்கேற்ற பலரும் விசா விதிமுறையை மீறி நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மசூதிகளுக்கு சென்று தங்கியதாக மாநில அரசுகள் புகார் தெரிவித்தன. இதனால் அந்த மாநாட்டில் பங்கேற்ற வெளிநாட்டினரில் 2,550 பேரை கருப்பு பட்டியலில் சேர்த்து, அவர்கள் அடுத்த 10 ஆண்டுகளுக்கு இந்தியாவுக்குள் நுழைய தடைவிதித்து உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மாநிலங்கள் கொடுத்த விவரங்களின் அடிப்படையில், இந்த நடவடிக்கையை உள்துறை அமைச்சகம் எடுத்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.