சென்னை,
ஆழ்கடல் மீன்பிடிப்பு, மீன்பிடி தடை காலத்தில் மீனவர்களுக்கு அரசு வழங்கும் உதவித்தொகையை உயர்த்துவது உள்ளிட்டவை குறித்து சென்னை ஐகோர்ட்டில் மீனவர்கள் நல அமைப்பின் தலைவர் பீட்டர் ராயன் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, மெரினா கடற்கரை சுகாதாரத்துடன் பராமரிப்பது குறித்து சென்னை மாநகராட்சிக்கு பல உத்தரவுகளை பிறப்பித்தது. இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், எம்.நிர்மல்குமார் ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், கலங்கரை விளக்கம் தொடங்கி பட்டினப்பாக்கம் வரை நடைபாதை வியாபாரிகளை ஒழுங்குபடுத்த 7 மாதங்களுக்கு முன்பு ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை இதுவரை சென்னை மாநகராட்சி அமல்படுத்தவில்லை. மீனவர்களுக்கு கடற் கரை ஓரத்திலேயே அடுக்குமாடி வீடு கட்டி கொடுத்துவிட்டு, சாலையை ஆக்கிரமித்து அவர்கள் வியாபாரம் செய்வதாக அவர்கள் மீதே எப்படி குற்றம் சாட்டமுடியும்? என்று கேள்வி எழுப்பினர்
மாநகராட்சி சார்பில் ஆஜரான வக்கீல், நடைபாதை வியாபாரிகள் அடையாளம் காணப்பட்டு 1,300 பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 300 பேருக்கு அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது வியாபாரிகள், சமூகவிரோதிகள் வருகையை போலீசார் கட்டுப்படுத்தினர். அதுபோல, நடவடிக்கை எடுத்தால், நடைபாதை வியாபாரிகளால் ஏற்படும் ஆக்கிரமிப்புகள் முழுமையாக கட்டுப்படுத்தப்படும் என்றனர்.
பின்னர், மெரினா கடற்கரையில் நடைபாதை வியாபாரிகளை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?, மீனவர்களுக்கு மீன் சந்தை அமைத்து கொடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என்பது குறித்து சென்னை மாநகராட்சி நிர்வாகம் பதில் அளிக்கவேண்டும் என்று உத்தரவிட்டனர்.
விசாரணையை வருகிற 26-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.