வையம்பட்டி,
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே உள்ள கே.புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டு நடைபெற்று 12 ஆண்டுகள் ஆகின்றன. இந்நிலையில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்திட கிராம மக்கள் முடிவு செய்து அதற்கான அனுமதியை மாவட்ட நிர்வாகத்திடம் பெற்றனர். இதைத்தொடர்ந்து நிபந்தனைகளின் படி ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளை செய்தனர். இதைத்தொடர்ந்து அங்குள்ள மாரியம்மன் கோவில் திடலில் நேற்று காலை ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது.
முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதைத்தொடர்ந்து உள்ளூர் காளைகளும் பின்னர் திருச்சி, திண்டுக்கல், புதுக்கோட்டை, கரூர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்டிருந்த காளைகளும் வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன. வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகள், வாடிவாசல் அருகே நின்று அடக்க வந்த வீரர்களை விரட்டின. மேலும் சில காளைகள் வீரர்களிடம் பிடிபடாமல் மின்னல் வேகத்தில் சென்றன. இருப்பினும் வீரர்கள் சில காளைகளை அடக்கினர். அடக்க முயன்ற வீரர்களை காளைகள் முட்டியதில் 10 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்களுக்கு அங்கு அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளையை அடக்கிய வீரர்களுக்கும் கட்டில், பீரோ, சைக்கிள், மோட்டார் சைக்கிள், சில்வர் பாத்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. ரொக்கப்பணமும் பரிசாக வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டில் 285 காளைகளும், 115 வீரர்களும் கலந்து கொண்டனர். முன்னதாக காளைகளை கால்நடை மருத்துவ குழுவினர் பரிசோதித்தனர். வீரர்களை மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்த பின்னரே போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.
இதேபோல் சிறந்த காளையின் உரிமையாளருக்கு மோட்டார் சைக்கிளும், சிறந்த வீரருக்கு 4 கிராம் தங்க நாணயமும் பரிசாக வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.