மாவட்ட செய்திகள்

காட்பாடியில் இருந்து 3-வது கட்டமாக சிறப்பு ரெயில் மூலம் 1,139 பேர் பாட்னா அனுப்பி வைக்கப்பட்டனர்

காட்பாடியில் இருந்து 3-வது கட்டமாக சிறப்பு ரெயில் மூலம் பீகார் மாநிலத்தை சேர்ந்த 1,139 பேர் நேற்று பாட்னாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

காட்பாடி,

கொரோனோ வைரஸ் தடுப்பு நடவடிக்கையின் காரணமாக கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதன் காரணமாக ரெயில் மற்றும் பஸ் போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டது. இந்த நிலையில் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் ஊரடங்கு உத்தரவால் மிகவும் பாதிக்கப்பட்டனர். இவர்கள் வேலூரில் உள்ள பல்வேறு தங்கும் விடுதிகளில் தங்கி இருந்தனர். அவர்கள் கையில் பணம் இல்லாமல் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். எனவே தங்களை தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திருப்பி அனுப்ப கோரிக்கை வைத்தனர்.

அதன்படி வேலூரில் பல்வேறு இடங்களில் தங்கியிருந்த ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 1,236 பேர் கடந்த 6-ந் தேதி முதல் கட்டமாகவும், 1,131 பேர் 8-ந் தேதி 2-வது கட்டமாகவும் காட்பாடியில் இருந்து சிறப்பு ரெயில் மூலம் ஜார்கண்ட் மாநிலத்திற்கு வேலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

அதைத் தொடர்ந்து நேற்று வேலூர் மற்றும் சென்னையில் தங்கியிருந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த 1,139 பேர் 3-வது கட்டமாக அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி வேலூரில் பல்வேறு இடங்களில் தங்கி இருந்தவர்கள் அரசு சிறப்பு பஸ்கள் மூலம் காட்பாடி ரெயில் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அதேபோல சென்னையில் தங்கியிருந்த 206 பேர் சிறப்பு அரசு பஸ்கள் மூலம் சென்னையிலிருந்து காட்பாடிக்கு அழைத்து வரப்பட்டனர். காட்பாடி ரெயில் நிலையத்தில் அவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்பட்டது.

பின்னர் அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் உணவு, ரொட்டி, குடிநீர் பாட்டில்கள் அடங்கிய பை வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து நோயாளிகள் மற்றும் அவரது உறவினர்கள் ஒழுங்குபடுத்தப்பட்டு, சமூக விலகலை கடைபிடித்தபடி காட்பாடி ரெயில் நிலையத்திற்குள் அனுப்பப்பட்டனர். அங்கு சென்ற அவர்கள் 26 பெட்டிகளுடன் தயாராக இருந்த சிறப்பு ரெயிலில் ஏறி அமர்ந்தனர்.

இதனை வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் ஆய்வு செய்தார். அப்போது போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார், வேலூர் உதவி கலெக்டர் கணேஷ், காட்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு துரைபாண்டியன், காட்பாடி தாசில்தார் பாலமுருகன் ஆகியோர் உடன் இருந்தனர். பின்னர் சிறப்பு ரெயில் காட்பாடியிலிருந்து பீகாருக்கு இரவு 9.40 மணிக்கு புறப்பட்டு சென்றது.

காட்பாடி ரெயில் நிலையத்தில் இருந்து சிறப்பு ரெயில் மூலம் நோயாளிகள் மற்றும் அவர்களுடைய உறவினர்களை பீகாருக்கு அனுப்புவதை செய்தி சேகரிக்க பத்திரிகையாளர்கள் மற்றும் தொலைக்காட்சி கேமராமேன்கள் சென்றனர். அவர்களிடம் போலீசார் கெடுபிடியில் ஈடுபட்டனர். பின்னர் ரெயில் நிலையத்திற்குள் சென்று சிறப்பு ரெயில் புறப்படுவதையோ அல்லது பயணிகள் நடந்து செல்வது போல புகைப்படமோ, வீடியோவோ எடுக்க கூடாது என ரெயில்வே போலீசார் கெடுபிடி செய்தனர். இதனால் செய்தியாளர்களுக்கும் போலீசாருக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்