மாவட்ட செய்திகள்

குடிசை மாற்று வாரியத்தில் வீடு வாங்கி தருவதாக கூறி ரூ.12 லட்சம் மோசடி: தீக்குளிக்க முயற்சி

கலெக்டர் அலுவலகம் முன் கணவன்-மனைவி இருவரும் தீக்குளிக்க முயன்றனர்

கோவை,

குடிசை மாற்றுவாரியத்தில் வீடு வாங்கி தருவதாககூறி ரூ.12 லட்சம் மோசடி நடந்தது. இது தொடர்பாக கோவை கலெக்டர் அலுவலகம் முன் கணவன்-மனைவி இருவரும் தீக்குளிக்க முயன்றனர். கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட வருவாய் அதிகாரி துரை ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். இதில் முதியோர் உதவித்தொகை, வீட்டு மனைப்பட்டா உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் மனு அளித்தனர்.

இதையொட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு ரேஸ்கோர்ஸ் போலீசார் நேற்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் மனு கொடுக்க வந்த பொதுமக்களை சோதனை செய்த பிறகே அனுமதித்தனர். அப்போது ஒரு தம்பதியினர் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்தனர். அவர்கள் திடீரென்று பாட்டிலில் வைத்திருந்த பெட்ரோலை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதை பார்த்த போலீசார் விரைந்து வந்து அங்கு குடத்தில் தயாராக வைத்திருந்த தண்ணீரை அவர்கள் மீது ஊற்றினர். பின்னர் அவர்களை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

விசாரணையில் அவர்கள் கோவை கோட்டைமேடு வின்சென்ட் ரோட்டை சேர்ந்த ஜெயக்குமார் (வயது 47), அவருடைய மனைவி சுகுணா (39) என்பது தெரியவந்தது.

மேலும் விசாரணையில் ஜெயக்குமார் கூறியதாவது:-

குடிசை மாற்று வாரியத்தில் வேலை செய்வதாக கூறி திருமலை என்பவர் எனக்கு அறிமுகம் ஆனார். அவர் என்னிடம் பணம் கொடுத்தால் குடிசை மாற்றுவாரிய வீடுகளை வாங்கி தருவதாக கூறினார். அதை நம்பி நான் அவரிடம் ரூ.70 ஆயிரம் கொடுத்தேன். மேலும் எங்கள் பகுதியை சேர்ந்த 15 பேரிடம் ரூ.12 லட்சம் வரை வசூல் செய்து அவரிடம் கொடுத்தேன். ஆனால் அவர் சொன்னபடி எங்களுக்கு வீடு வாங்கி கொடுக்க வில்லை.

உடனே குடிசைமாற்று வாரிய அலுவலகத்தை தொடர்பு கொண்டபோது திருமலை என்று யாரும் இங்கு பணிபுரியவில்லை என்று கூறினர். இதனால் அதிர்ச்சிஅடைந்த நாங்கள் அந்த நபரை தொடர்பு கொள்ள முயன்றோம். ஆனால் முடியவில்லை. இந்த நிலையில் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் எங்களிடம் பணத்தை கேட்டு தொல்லை செய்கின்றனர். எனவே திருமலை மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தோம். ஆனால் அவர்கள் நடவடிக்கை எடுக்க வில்லை. எனவே தான் நாங்கள் தீக்குளிக்க முடிவு செய்தோம். இவ்வாறு அவர் கூறினார்.

கோவை சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் சுமதி, தனது குழந்தையுடன் வந்து மனு அளித்தார். அதில், நான், எனது கணவர் கருப்பசாமியுடன் கடந்த 28.2.18 அன்று பவானிசாகர் அருகே உள்ள கோவிலுக்கு சென்றேன். அப்போது தேனீக்கள் கொட்டியதில் எனது கணவர் இறந்து விட்டார். எனக்கு 11 மாத பெண் குழந்தை உள்ளது. எனக்கு சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஒரு பெண் குழந்தைக்கான உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்ட குழு தலைவர் சு.பழனிசாமி, துணை தலைவர் சக்திவேல் உள்பட விவசாயிகள் அளித்த மனுவில், கேரளாவில் தற்போது நிபா வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. எனவே முன்எச்சரிக்கையாக மாநில எல்லையில் சிறப்பு முகாம் அமைத்து, வெளி மாநிலங் களில் இருந்து வரும் மக்களை மருத்துவ ஆய்வு செய்ய வேண்டும். காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் அவர்களுக்கு உரிய மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

கோவை பூமார்க்கெட் பகுதியை சேர்ந்த சூரியபிரகாஷ், அவருடைய மனைவி பெரியமுத்து ஆகியோர் மனநலம் பாதிக்கப்பட்ட தங்களின் மகனுடன் வந்து மனு அளித்தனர். அதில், எங்களுக்கு 12 வயதில் மனநலம் பாதிக்கப்பட்ட அரவிந்த்கண்ணன் என்ற மகன் உள்ளார். நாங்கள் வீட்டில் இல்லாத நேரத் தில் மர்ம நபர் ஒருவர் எங்களது மகன் முகத்தில் பீடியால் சூடு வைக்கிறார். இதனால் எங்களது மகன் முகம் முழுவதும் சூடு காயம் உள்ளது. இது குறித்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தால் நடவடிக் கை எடுப்பது இல்லை. மேலும் அந்த நபர் எங்களது குழந்தையை அடிக்கடி தாக்கி வருகிறார். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்