சென்னை,
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
2009-ம் ஆண்டு ஈழத்தில் இலங்கை அரசு நடத்திய பயங்கரவாத ஒடுக்குமுறையில் லட்சக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர். தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான இந்த போர், முள்ளிவாய்க்கால் என்னுமிடத்தில் பொதுமக்களின் மரண ஓலங்களுக்கிடையில் குருதிச் சேற்றில் ஓய்ந்தது.
விடுதலைப்புலிகள் இயக்கம் ஒரு தேசிய இனவிடுதலை இயக்கம் என அங்கீகரிக்கப்படுவதற்கு பதிலாக பயங்கரவாத இயக்கமென்று உலக அரங்கில் தனிமைப்படுத்தப்பட்டது. ஒட்டுமொத்தமாக ஈழத்தமிழர்களின் தேசிய இனவிடுதலைப் போராட்டம் நசுக்கப்படுவதற்கு புலிகளுக்கு எதிரான இந்த உத்தியே இலங்கை அரசுக்கு சாதகமாக அமைந்தது.
இந்தநிலையில், ராஜபக்சே அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்டதால் ஈழத்தமிழர்களின் தாயகத்தை அனைத்து வகையிலும் ஆக்கிரமிப்புச் செய்து சிங்களக் குடியேற்றம் போன்ற தமிழர் விரோத நடவடிக்கைகளின் மூலம் ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகிறது.
இன அழித்தொழிப்பு மட்டுமின்றி ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டச் சுவடுகளை அழிப்பதிலும் இலங்கை அரசினர் குறியாக உள்ளனர். இந்த போக்கை வன்மையாக கண்டிக்கிறோம்.
முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 12-வது ஆண்டாக நினைவுகூரப்படும் இந்த நாளில், ஐ.நா. பேரவை உள்ளிட்ட சர்வதேச சமூகத்தின் நல்லாதரவைத் திரட்டி, ஈழ விடுதலையை வென்றெடுக்கவும், உலகத் தமிழர்களுக்கிடையிலான முரண்களைக் கூர்மைப்படுத்தாமல் ஒற்றுமைக் கூறுகளை வலிமைப்படுத்தவும் உறுதி ஏற்போம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.