கோவை,
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள புங்கம்பள்ளி வழிப்பாளையத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 24). இவருக்கும் மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுமிக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த 2012-ம் ஆண்டு நவம்பர் மாதம் 27-ந் தேதி காலை 9 மணிக்கு அந்த சிறுமி பள்ளிக்கு சென்று கொண்டு இருந்தார்.
அப்போது அங்கு வந்த சதீஷ்குமார், சிறுமிக்கு திருமண ஆசைக்காட்டி கடத்தி சென்று அன்னூர் பஸ்நிலையம் அருகே உள்ள ஒரு கோவிலில் வைத்து தாலியை கட்டி திருமணம் செய்தார். பின்னர் அவர் சிறுமியை ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள குருமந்தூருக்கு அழைத்து சென்றார்.
இது குறித்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் சதீஷ்குமார் மீது கடத்திச்செல்லுதல், சிறுமியை திருமணம் செய்தல் ஆகிய 2 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு கோவையில் உள்ள மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இதில் அரசு தரப்பில் வக்கீல் ஆர்.சரோஜினி ஆஜரானார்.
வழக்கு விசாரணை முடிந்ததை தொடர்ந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில், குற்றம் சாட்டப்பட்ட சதீஷ்குமாருக்கு சிறுமியை கடத்திச்சென்றதற்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.1000 அபராதமும், சிறுமியை திருமணம் செய்ததற்கு 2 ஆண்டு சிறையும், ரூ.1000 அபராதமும், அபராத தொகையை கட்டத்தவறினால் மேலும் 6 மாதம் கடுங்காவல் தண்டனையும் அனுபவிக்க வேண்டும். இந்த தண்ட னையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி ராதிகா தீர்ப்பு கூறினார்.