மாவட்ட செய்திகள்

சேலம் மாவட்டத்தில் 28 மையங்களில் நீட் தேர்வை 14 ஆயிரத்து 474 பேர் எழுதினர்- 593 பேர் வரவில்லை

சேலம் மாவட்டத்தில் 28 மையங்களில் நடந்த நீட் தேர்வை 14 ஆயிரத்து 474 மாணவ, மாணவிகள் எழுதினர். 593 பேர் தேர்வு எழுத வரவில்லை.

சேலம்:

சேலம் மாவட்டத்தில் 28 மையங்களில் நடந்த நீட் தேர்வை 14 ஆயிரத்து 474 மாணவ, மாணவிகள் எழுதினர். 593 பேர் தேர்வு எழுத வரவில்லை.

நீட் தேர்வு

நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான 'நீட்" தேர்வு நேற்று நடைபெற்றது. சேலம் மாவட்டத்தில் நீட் தேர்வு எழுதுவதற்காக 15 ஆயிரத்து 67 பேர் விண்ணப்பத்திருந்தனர். இதற்காக மாவட்டத்தில் கல்லூரிகள், பள்ளிகள் என 28 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் மாநகரில் மட்டும் 16 மையங்கள் ஏற்படுத்தப்பட்டன.

நீட் தேர்வு எழுதுவதற்காக காலை 9 மணி முதலே மாணவ, மாணவிகள் தேர்வு மையங்களுக்கு வரத்தொடங்கினர். இதில் பெரும்பாலான மாணவர்கள் தங்களது பெற்றோர்களை உடன் அழைத்து வந்திருந்தனர். அவர்களை அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உடனடியாக உள்ளே அனுப்ப வில்லை. இதனால் தேர்வு மையங்கள் முன்பு கூட்டம் அதிகளவு இருந்தது.

சோதனை

ஒவ்வொரு தேர்வு மையம் முன்பு இருந்த அறிவிப்பு பலகையில் மாணவர், மாணவிகளின் ஹால்டிக்கெட் எண் குறிப்பிடப்பட்டு அவர்கள் தேர்வு மையத்தில் எந்த அறைக்கு செல்ல வேண்டும் என்பது குறித்தும், கொரோனா விதிகளை பின்பற்றுவது குறித்தும் அங்குள்ள அறிவிப்பு பலகையில் நோட்டீசு ஒட்டப்பட்டிருந்தது.

தொடர்ந்து காலை 11 மணி முதல் தேர்வு மையத்துக்குள் ஒவ்வொரு குழுவாக அனுப்பினர். முன்னதாக மாணவ, மாணவிகளுக்கு தனிதனியாக சோதனை செய்யப்பட்டன. அவர்கள் எலக்ட்ரானிக் பொருட்கள் வைத்துள்ளார்களா? என்பதை சூப்பர் ஸ்கேனிங் என்ற கருவி மூலம் சோதனை செய்யப்பட்டது. பின்னர் அவர்களுடைய உடலின் வெப்பநிலை தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்பட்டது.

நகை, கம்மல்

தேர்வு மையங்களுக்கு மாணவிகள் பலர் நகை, கம்மல் உள்ளிட்டவை அணிந்து வந்தனர். இதையடுத்து அவர்களிடம் அதிகாரிகள் நகை, கம்மல், கேர்பின், துப்பட்டா உள்ளிட்டவைகளை பெற்றோர்களிடம் கழற்றி கொடுத்துவிட்டு வருமாறு தெரிவித்தனர். அதன்படி மாணவிகள் அங்கேயே நகை, கம்மல், துப்பட்டா உள்ளிட்டவைகளை கழற்றி கொடுத்தனர்.

தேர்வு மையத்திலேயே பேனா கொடுப்பதால் வெளியில் இருந்து மாணவ, மாணவிகள் பேனா எடுத்து அனுமதிக்கவில்லை. அதன்பிறகு ஹால்டிக்கெட், ஆதார் அட்டை, பாஸ்போர்ட் புகைப்படம் ஆகியவற்றை அதிகாரிகள் சரிபார்த்தனர். இதற்காக மாணவர்கள் நீண்ட வரிசையில் நின்றனர். அதன்பிறகு மாணவ, மாணவிகள் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

14,474 பேர் எழுதினர்

தேர்வு எழுத சென்ற மாணவ, மாணவிகளுக்கு அங்கிருந்த அவர்களுடைய பெற்றோர் வாழ்த்து தெரிவித்து அனுப்பியதுடன் எந்த ஒரு பதற்றமும் இல்லாமல் தேர்வு எழுதுமாறு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். சில மாணவ, மாணவிகளுக்கு அவர்களுடைய பெற்றோர் முத்தமிட்டு அனுப்பி வைத்ததையும் பார்க்க முடிந்தது.

இதையடுத்து மதியம் 2 மணிக்கு சரியாக தேர்வு தொடங்கியது. மாணவ, மாணவிகளும் ஆர்வமுடன் எழுதினர். சேலம் மாவட்டத்தில் நீட் தேர்வை 14 ஆயிரத்து 474 மாணவ, மாணவிகள் எழுதினர் என்றும், 593 பேர் தேர்வு எழுத வரவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். நீட் தேர்வையொட்டி நேற்று சேலம் மாவட்டத்தில் சேலம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு