வள்ளியூர்,
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்டு உள்ள ஊரடங்கால் வெளிமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பலர் வேலையின்றி தவித்து வந்தனர். அவர்களில் சொந்த ஊருக்கு செல்ல விரும்பும் தொழிலாளர்களை அனுப்பி வைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது. அதன்படி வடமாநில தொழிலாளர்கள் சிறப்பு ரெயில்கள் மூலம் தங்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 3, 4-வது அணு உலைகள் கட்டுமான பணியில் ஈடுபட்டு வரும் ஒப்பந்த தொழிலாளர்கள் 1,025 பேரும், தூத்துக்குடியில் பணியாற்றி வந்த தொழிலாளர்கள் 263 பேரும், நெல்லையில் பணியாற்றிய 11 பேரும் என மொத்தம் 1,299 பேர் நேற்று முன்தினம் சிறப்பு ரெயில் மூலம் பீகார் மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
நேற்று 2-வது கட்டமாக ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் வேலை செய்து வந்த ஜார்கண்ட் மாநில தொழிலாளர்கள் 140 பேர் நேற்று ஊருக்கு புறப்பட்டனர்.
இதற்காக அவர்களுக்கு தூத்துக்குடி புதிய துறைமுகம் பகுதியில் வைத்து மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து அனைவருக்கும் உணவு, தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன. பின்னர் 5 அரசு பஸ்களில் நெல்லை ரெயில் நிலையத்துக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர்.
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் இருந்து ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஒப்பந்த தொழிலாளர்கள் 1,220 பேர் நேற்று சொந்த ஊருக்கு புறப்பட்டனர். இதற்காக அவர்களுக்கு கூடங்குளம் அணுமின் நிலைய வளாக பகுதியில் வைத்து மருத்துவ குழுவினர் உடல் வெப்பநிலை உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகளை செய்தனர்.
நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபிநபு, சேரன்மாதேவி உதவி கலெக்டர் பிரதீக் தயாள், வள்ளியூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் மற்றும் அதிகாரிகள், பயணத்தின்போது தொழிலாளிகள் கடைபிடிக்க வேண்டிய சமூக இடைவெளி உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகள் குறித்து ஆலோசனை வழங்கினர். இதையடுத்து தொழிலாளர்கள் அனைவரும் 34 சிறப்பு பஸ்கள் மூலம் நெல்லை ரெயில் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் வந்த பஸ்கள் நெல்லை கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட புதிய பாலத்தில் அணிவகுத்து நின்றன.
நெல்லையில் பணியாற்றிய 76 தொழிலாளர்களுக்கு பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவர்கள் 2 பஸ்களில் சந்திப்பு ரெயில் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டனர். இவர்களும், கூடங்குளம் மற்றும் தூத்துக்குடியில் இருந்து அழைத்து வரப்பட்டவர்களும் என மொத்தம் 1,436 தொழிலாளர்கள் சிறப்பு ரெயில் மூலம் நேற்று மாலை 6 மணிக்கு ஜார்கண்ட் மாநிலம் காடியாவுக்கு புறப்பட்டு சென்றனர்.
முன்னதாக அந்த ரெயிலுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. ரெயிலில் தொழிலாளர்கள் சமூக இடைவெளி கடைபிடித்து பயணம் செய்தனர். ரெயில் நிலையத்துக்குள் ஜார்கண்ட் மாநிலத்துக்கு சென்ற தொழிலாளர்களை தவிர மற்ற யாரும் அனுமதிக்கப்படவில்லை. ரெயில் நிலையம் செல்லும் த.மு.ரோடு அடைக்கப்பட்டு இருந்தது. மேலும் ரெயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.