திருச்சி,
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே இடையாற்றுமங்கலத்தில் நாராயணஅய்யர் என்பவருக்கு சொந்தமாக நிலம் இருந்தது. அந்த நிலத்தை 2 பேர் விலைக்கு வாங்கி வைத்து இருந்தனர். அந்த நிலத்தில் 0.92 சென்ட் நிலத்தை கடந்த 1973-ம் ஆண்டு குந்தாளத்தம்மாள்(வயது 84) என்பவருக்கு விற்றுள்ளனர். குந்தாளத்தம்மாளின் மகன்கள் அந்த நிலத்தில் விவசாயம் செய்ய திட்டமிட்டு இருந்தனர்.
இந்தநிலையில் லால்குடி கூகூரை சேர்ந்த சிவாஜி(49) என்பவர், அந்த நிலத்தை அபகரிக்கும் நோக்கத்தோடு நாராயணஅய்யரின் மகனான வெங்கட்ராமஅய்யரின் 4 மகன்கள் போல, போலியான நபர்களை வைத்து ஆள்மாறாட்டம் செய்து, போலி வாக்காளர் அடையாள அட்டை தயாரித்து போலி பட்டா பெற்றுள்ளார்.
நிலம் அபகரித்தவர் கைது
பின்னர் அந்த பட்டாவை வைத்து 2017-ம் ஆண்டில் சிவாஜி நிலத்தை தனது பெயருக்கு கிரையம் பெற்றது போல் போலி கிரையப்பத்திரமும் தயாரித்து கொண்டார். அதை வைத்து தனது நண்பரான ராஜா பெயரில் நிலத்தை பத்திரப்பதிவு செய்து ரூ.15 லட்சம் மதிப்புள்ள நிலத்தை அபகரிப்பு செய்துள்ளார். இதையடுத்து சிவாஜியும், ராஜாவும் அந்த நிலத்தில் வேலி போட சென்றுள்ளனர். இது பற்றி அறிந்த குந்தாளத்தம்மாள் திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் உத்தரவின்பேரில், நிலஅபகரிப்பு தடுப்பு தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தினார்கள். விசாரணைபிறகு, இதுகுறித்து நிலஅபகரிப்பு தடுப்புபிரிவு போலீசார் வழக்குப்பதிந்து போலி ஆவணங்கள் தயாரித்து நிலத்தை அபகரித்த சிவாஜியை கைது செய்தனர். தொடர்ந்து தலைமறைவாக உள்ள ராஜாவை தேடி வருகிறார்கள்.