சென்னை,
கிருஷ்ணகிரியை சேர்ந்தவர் சரவணகுமார். இவர் காஷ்மீர் மாநிலத்தில் ராணுவ வீரராக வேலை செய்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரது செல்போனுக்கு அழைப்பு வந்தது. செல்போனில் பேசியவர் சென்னையில் இருந்து பேசுவதாக கூறினார்.
உங்களுக்கு ரூ.3 லட்சம் மதிப்புள்ள இன்சூரன்ஸ் பாலிசி கிடைத்துள்ளது என்றும், ரூ.35 ஆயிரம் ஆன்-லைன் மூலமாக செலுத்தினால் இன்சூரன்ஸ் பாலிசியை உங்கள் வீட்டிற்கே அனுப்பி வைப்பதாகவும் தெரிவித்தார்.
இதை உண்மை என்று நம்பிய சரவணகுமார் உடனடியாக ஆன்-லைன் மூலமாக ரூ.35 ஆயிரம் அனுப்பினார். அதற்கு பிறகு ஆவணங்கள் தயார் செய்வதற்கு மேலும் ரூ.10 ஆயிரம் வேண்டும் என்று செல்போனில் பேசியவர் கூறினார். கூடுதலாக ரூ.10 ஆயிரத்தையும் சரவணகுமார் செலுத்தினார்.
அதன்பிறகு இன்சூரன்ஸ் பாலிசி என்ற பெயரில் அட்டை ஒன்றை சரவணகுமாருக்கு அனுப்பி வைத்தனர். அதனை நண்பர்களிடம் காண்பித்தபோது அது போலியானது என்று தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராணுவ வீரர், தான் பணம் அனுப்பிய வங்கி கணக்கை ஆய்வு செய்தபோது, அது சென்னை நுங்கம்பாக்கத்தில் செயல்படும் ஒரு நிறுவனத்தின் வங்கி கணக்கு என்பது தெரியவந்தது.
உடனே சரவணகுமார் சென்னை நுங்கம்பாக்கத்திற்கு வந்து குறிப்பிட்ட நிறுவனத்தில் விசாரணை நடத்தினார். அவர்கள் உரிய பதிலை சொல்லவில்லை.
இதுகுறித்து சரவணகுமார் நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
உதவி கமிஷனர் கலியன் மேற்பார்வையில் போலீசார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். ராணுவ வீரர் சரவணகுமாரிடம் பணம் வசூலித்த குறிப்பிட்ட நிறுவனத்தில் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
அந்த நிறுவனம் இதுபோல் மேலும் 14 பேரிடம் இன்சூரன்ஸ் பாலிசி தருவதாக கூறி லட்சக்கணக்கில் பணமோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.
அந்த நிறுவனத்தை ஆறுமுகம் என்பவர் நடத்தி வந்தார். அவர் தலைமறைவாகி விட்டார். குறிப்பிட்ட நிறுவனத்தில் வேலை பார்த்த கார்த்திக், சத்யநாராயணன், கனிமொழி ஆகிய 3 ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் தான் செல்போனில் பேசி ராணுவவீரர் சரவணகுமார் உள்பட 15 பேரிடம் ஆன்-லைன் மூலம் பணமோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. தலைமறைவான ஆறுமுகத்தை போலீசார் தேடி வருகிறார்கள்.