மாவட்ட செய்திகள்

தீபாவளி கூட்ட நெரிசலில் திருட்டை தடுக்க கோவையில் 1,500 போலீசார் பாதுகாப்பு

தீபாவளி கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டு நடப்பதை தடுக்க கோவையில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

தினத்தந்தி

கோவை,

தீபாவளி பண்டிகை நாளை (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கடை வீதிகளுக்கு பொருட்கள் வாங்க பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் வருகின்றனர். இதனால் அனைத்து கடைவீதிகளிலும் கூட்ட நெரிசல் ஏற்பட்டு உள்ளது. இந்த கூட்டநெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் கைவரிசை காட்ட வாய்ப்புள்ளது. எனவே திருட்டு நடப்பதை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்காக கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சுமித் சரண் தலைமையில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். கோவையில் மக்கள் கூட்டம் அதிகமுள்ள டவுன்ஹால், காந்திபுரம், ஆர்.எஸ்.புரம், சிங்காநல்லூர், பீளமேடு உள்பட முக்கிய பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சட்டம்-ஒழுங்கு, குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து போலீசார் இணைந்து குற்றத் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

கடைவீதிகளில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் வாகனங்களை நிறுத்துவது, பொதுமக்கள் சாலைகளை கடக்க உதவுவது போன்ற பணிகளில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டு உள்ளனர். ஒப்பணக்காரவீதி, பெரிய கடை வீதி, ராஜ வீதிகளில் நேற்று கூட்டம் அதிகமாக இருந்தது. எனவே கயிறு கட்டி பொதுமக்களை போலீசார் தடுத்து நிறுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.

குற்றப்பிரிவு போலீசார் சாதாரண உடையில் ரோந்து சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர். கடை வீதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் கண்காணிப்பு கோபுரங்களில் இருந்தவாறு போலீசார் பைனாகுலர் மூலம் யாராவது குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்களா? என்று கண்காணித்தனர்.

ஒப்பணக்கார வீதி, பெரியகடை வீதி, கிராஸ்கட் சாலைகளில் பாதசாரிகள் நடந்து செல்வதற்காக சாலையின் 2 பக்கமும் கயிறு கட்டப்பட்டு உள்ளது. அது போல் இரும்பு தடுப்பான்கள் அமைத்தும் வழி ஏற்படுத்தப்பட்டது. நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் தீபாவளி பொருட்கள் வாங்குவதற்காக கடைவீதிகளில் பொதுமக்களின் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது.

இதனால் சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது. மேலும் காந்திபுரம், உக்கடம், சிங்காநல்லூர், சாய்பாபாகாலனி ஆகிய பகுதிகளில் உள்ள பஸ்நிலையங்களில் திருட்டு நடக்காமல் இருப்பதற்காக கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டது.

ரெயில்களில் பட்டாசுகள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கோவை ரெயில் நிலையத்தின் 2 நுழைவு வாயில்களிலும் போலீசார் மெட்டல் டிடெக்டர், ஸ்கேனர் மூலம் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்து உள்ளே அனுமதித்தனர். இதுதவிர கோவையில் வந்து நிற்கும் ரெயில்களிலும் போலீசார் சென்று பயணிகள் பட்டாசுகள் கொண்டு வருகிறார்களா? என்று சோதனை நடத்தினார்கள்.

கோவை சிங்காநல்லூர் பஸ் நிலையத்தில் இருந்து மதுரை, திருநெல்வேலி, தேனி, நாகர்கோவில், ராஜபாளையம், திருச்சி, கும்பகோணம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், பெரம்பலூர், அறந்தாங்கி உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி பல்வேறு ஊர்களுக்கு செல்வதற்கு தமிழக அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

தீபாவளி விடுமுறை விடப்பட்டு உள்ளதால் சிங்காநல்லூர் பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. இதனால் வெளியூர் செல்லும் பயணிகள் முண்டியடித்து பஸ்களில் ஏறினர். பஸ் நிலையத்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இது குறித்து அரசு போக்குவரத்துக் கழக அதிகாரி கூறுகையில், சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டாலும் கட்டணத்தில் எந்தவித மாற்றமும் இல்லை, சாதாரண நாட்களில் என்ன கட்டணம் வசூலிக்கப்படுகிறதோ அதே கட்டணம் மட்டுமே பண்டிகை காலங்களிலும் வசூலிக்கப்படுகிறது, என்றார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது