கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி கூட்ட அரங்கில், வருங்கால வாக்காளர் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கி பேசியதாவது:- இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, வரும் காலத்தில் வாக்காளர் ஜனநாயக கடமையாற்ற ஏதுவான வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. தேர்தல் நடைபெறும் பொழுது ஜனநாயக கடமையாற்றுவது நமது உரிமை. சட்டத்தை நெறிமுறைப்படுத்தக் கூடிய உயர்ந்த தலைவர்களை உருவாக்க கூடியது வாக்கு பதிவுதான்.
18 வயது பூர்த்தி அடைந்திருந்தால், உங்களுக்கு வாக்களிக்கும் உரிமை உள்ளது. எனவே, 18 வயது பூர்த்தி அடைந்த உடன் வாக்காளர் பட்டியலில் மாணவிகள் தங்கள் பெயரினை பதிவு செய்யுங்கள். மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், மாற்றம் உள்ளிட்டவற்றை அதற்குரிய படிவத்தில் பூர்த்தி செய்ய மாவட்டம் முழுவதும் சிறப்பு முகாம்கள் அமைத்து அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பள்ளி மாணவிகளாகிய நீங்கள் எதிர் காலத்தில் வாக்களிக்கும் உரிமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது மூலம் தேர்தல் காலத்தில் ஒரு அரசாங்கத்தை உருவாக்கும் சக்தி உள்ளது. இவ்வாறு கலெக்டர் கதிரவன் பேசினார். முன்னதாக பள்ளி மாணவிகளிடையே வாக்காளர் பதிவு குறித்த விழிப்புணர்வு கலந்துரையாடல் நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) பிரபாகரன், உதவி கலெக்டர் அருண், தாசில்தார் கன்னியப்பன், தேர்தல் பிரிவு தாசில்தார் மதுசெழியன், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சேகர் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.