பெங்களூரு: பெங்களூருவில் இருந்து புறப்பட்ட 2 விமானங்கள் நடுவானில் மோத முயன்ற பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. இதில் நூலிழையில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
பெங்களூருவில் இருந்து...
பெங்களூரு புறநகர் தேவனஹள்ளியில் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் உள்ளது. இங்கிருந்து மும்பை, டெல்லி உள்ளிட்ட நகரங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த 7-ந்தேதி காலை பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து இன்டிகோ நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் (விமான எண்-6இ455) ஒன்று மேற்குவங்காள தலைநகர் கொல்கத்தாவுக்கும், மற்றொரு விமானம் (6இ246) ஒடிசா மாநிலம் புவனேஸ்வருக்கும் புறப்பட்டு செல்ல விமான நிலையத்தின் வடக்கு ஓடுதளத்தில் இருந்து சுமார் 5 நிமிட இடைவெளியில் புறப்பட்டு வானில் பறக்க தொடங்கின.
நடுவானில் விமானங்கள் மோத முயற்சி
நடுவானில் இரு விமானங்களும் மிகவும் நெருக்கமாக ஒன்றுடன் ஒன்று மோதுவது போல் பறந்தன. உடனே ரேடார் கன்ட்ரோலர் திசை திருப்பும் கட்டளை கொடுத்து இரு விமானங்களும் வெவ்வேறு திசையில் பறக்க தொடங்கின. இதனால் நடுவானில் நிகழ இழந்த பெரும் விபத்து அதிர்ஷ்டவசமாக தவிர்க்கப்பட்டது.
இந்த சம்பவத்தால் இரு விமானங்களில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளும் சில நிமிடங்கள் திக்...திக்... மனநிலையில் இருந்தனர். விபத்து தவிர்க்கப்பட்டதை அறிந்த பிறகே சகஜநிலைக்கு திரும்பினர்.
ஆனால் இதுகுறித்து இன்டிகோ விமான நிறுவனமும், இந்திய விமான நிலைய ஆணையமும் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.
விசாரணை நடத்தப்படுகிறது
அதே வேளையில் சிவில் விமான போக்குவரத்து இயக்குனரக (டி.ஜி.சி.ஏ.) தலைவர் அருண்குமார் கூறுகையில், பெங்களூருவில் இருந்து கொல்கத்தா, புவனேஸ்வருக்கு புறப்பட்ட இன்டிகோ விமானங்கள் நடுவானில் மோத முயன்ற சம்பவம் தடுக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில் தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.